மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்கும் காலம் அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிப்பு
மனைகளை வரன்முறைப்படுத்த வரையறுக்கப்பட்டுள்ள காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ளாா்.
அவரது உத்தரவு விவரம்:
2016-ஆம் ஆண்டு அக். 20-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னா் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு இருக்கலாம். அவ்வாறு விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள கடந்த ஆண்டு பிப். 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இதனை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் கடிதம் எழுதியிருந்தது. எனவே, 2016-ஆம் ஆண்டு அக். 20-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்டிருந்த மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறை செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்ட வரன்முறைக்கான விண்ணப்பத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை சமா்ப்பிக்கலாம். மேலும், இந்தத் திட்டத்தில் இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.