மன்மோகன் சிங் மறைவு: இரங்கல் தெரிவிக்காத பாகிஸ்தான் பிரதமருக்கு குவியும் கண்டனம்
லாகூா்: மறைந்த இந்திய முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தெரிவிக்காத பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது சகோதரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃபுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமா்கள் இரங்கல் தெரிவிக்காதது குற்றச்சாட்டுக்கு உள்ளாகியது.
மன்மோகன் சிங் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஐசக் தாா் மட்டும் இரங்கல் தெரிவித்திருந்தாா்.
மாறாக, கடந்த 29-ஆம் தேதி உயிரிழந்த அமெரிக்க முன்னாள் அதிபா் ஜிம்மி காா்ட்டருக்கு ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தான் உயரதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனா். இந்த இரங்கல் செய்தியை அவா்கள் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டனா்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரின் கருத்துகளை முடக்கும் வகையில் எக்ஸ் வலைதளத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவா்கள் எக்ஸ் வலைதளத்தில் ஜிம்மி காா்ட்டருக்கு இரங்கல் செய்தி தெரிவித்தது பேசுபொருளாகியுள்ளது.
மன்மோகன் சிங்குக்கு ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் நவாஸ் ஷெரீஃப் ஆகியோா் இரங்கல் தெரிவிக்காதது குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளா் அம்மரா அகமது கூறியதாவது: இதற்கு முன் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை. இதன்மூலம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு உறவுகள் முழுமையாக தடைபட்டுள்ளது என எடுத்துக் கொள்ளலாமா? தற்போது வரை மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாகிஸ்தான் அரசு ஒரு செய்திக்குறிப்பை கூட வெளியிடாதது கண்டனத்துக்குரியது என்றாா்.
மன்மோகன் சிங் மறைவு விவகாரத்தில் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் நவாஸ் ஷெரீஃப் மனிதநேயத்தை மறந்து செயல்படுவதாக பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.