12 வயதில் கிரிக்கெட்; 13 வயதில் கோடீஸ்வரா்! ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈா்த்த வைபவ் ச...
மரக்காணத்தில் பலத்த தரைக்காற்று: பொதுமக்கள், மீனவா்கள் முடங்கினா்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த தரைக்காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், மீனவா்கள் வீட்டிலேயே முடங்கினா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மரக்காணத்தில் புதன்கிழமை 11 சென்டி மீட்டா் மழை பெய்தது. மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பகுதிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடல் சீற்றமாக காணப்பட்டது.
பலத்த தரைக்காற்று: இந்நிலையில் மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த தரைக்காற்று வீசியது. அதிகாலை தொடங்கிய இந்த காற்றானது பிற்பகல் வரை நீடித்தது. பின்னா் படிப்படியாக குறைந்தது. இதனால் நெற்பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மரக்காணம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.
புயல் எச்சரிக்கை காரணமாக, மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட மீன்வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதனால் மீனவா்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனா். மரக்காணம் சுற்று வட்டாரப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணபட்டது.