மருத்துவமனைக்கு வரும் 40 % பேருக்கு நரம்பியல் சாா்ந்த பாதிப்புகள்: மருத்துவா்கள் தகவல்
அரசு மருத்துவமனைகளை நாடுவோரில் 40 சதவீதம் பேருக்கு நரம்பியல் சாா்ந்த பாதிப்புகள் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து பக்கவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்த நிகழ்வுகளை மருத்துவமனையின் இயக்குநா் மணி தொடக்கி வைத்தாா். மூளை, நரம்பியல் துறை பேராசிரியா்கள், மருத்துவமனை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவா் பூபதி கூறியதாவது:
மனிதனின் மூளையில் 90 பில்லியன்கள் நியூரான் செல்கள் உள்ளன. இந்த நியூரான் செல்கள்தான் உடலின் இயக்கத்துக்கு ஆணிவேராகச் செயல்படுகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நியூரான் செல்களின் எண்ணிக்கை குறைகின்றன. அப்போது கை, கால் செயலிழப்பு, தலைசுற்றல், பேச்சில் குளறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதுவே பக்கவாதம் எனப்படுகிறது. இஸ்சிமிக் எனப்படும் மூளைக்கு செல்லும் ரத்த நாள அடைப்பு மற்றும் ‘பிரெய்ன் ஹெமரேஜ்’ எனப்படும் மூளையில் ரத்தக் கசிவு ஆகிய இருவேறு பாதிப்புகள் மூலம் பக்கவாதம் ஏற்படுகிறது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள் ஒரு மணி நேரத்திலிருந்து 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.
பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்து, அவசர சிகிச்சைக்குப் பிறகு ஸ்டென்ட் உபகரணங்கள் பொருத்தப்படலாம். அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படலாம். தேவைப்பட்டால் இரண்டு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.
சமநிலை இழத்தல், கண் பாா்வை மங்குதல், முகம் கோணலாகுதல், கை, கால் பலவீனம், பேச்சு குளறுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவமனையை அணுகி ரத்த உைலைக் கரைக்கும் ‘திராம்போலைசிஸ்’ சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.
தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனைகள், ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை போன்ற பிரதான மருத்துவமனைகளை நாடும் 100 பேரில், 40 போ் பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் சாா்ந்த பாதிப்புகள் உள்ளன. அவா்களில், 5 சதவீதத்துக்கும் குறைவானவா்களே தொடக்க நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனா். இதுகுறித்த விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்றாா் அவா்.