மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி!
கரீபியன் கடல்பகுதியிலுள்ள ஹெயிட்டி நாட்டின் மருத்துவமனையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.
தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் நேற்று (டிச.24) புதுப்பிக்கப்பட்ட பொதுமருத்துவமனையை திறக்க வருகைத் தரவிருந்த அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சருக்காக அங்கிருந்த மக்கள் அனைவரும் காத்திருந்தனர்.
அப்போது, ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பத்திரிக்கையாளர்களும் ஒரு காவல்துறை அதிகாரியும் பலியானார்கள். மேலும், பல பத்திரிக்கையாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு அந்நகரத்தை கட்டுப்படுத்தும் வின் அன்சம் எனும் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
இதையும் படிக்க: கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து தீப்பற்றியது! 42 பேர் பலி
இதுகுறித்து அந்த கும்பல் வெளியிட்ட விடியோவில், கடந்த மார்ச் மாதம் அவர்கள் கைப்பற்றி தகர்த்த அந்த பொதுமருத்துவமனையை அவர்களது அனுமதியின்றி மீண்டும் திறக்க முயன்றதினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் ஜொவெனெல் மொய்சி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் கும்பல்களின் தாக்குதல்கள் தலைத்தூக்கியுள்ளது.
இந்நிலையில், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 85 சதவிகிதப் பகுதி இதுப்போன்ற கொலைகார கும்பல்களின் கட்டுப்பட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.