சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை
நமது நிருபர்
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்தக் கோரி பிடியாணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகள் ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற வெளியிட்ட தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா.எம்.திரிவேதி, எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்குரைஞர் குமணன் வாதிடுகையில், "இந்த வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எவரும் ஆஜராகவும் இல்லை. மெத்தனப்போக்குடன் நடந்து கொள்ளும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என கோரினார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையின்போது அனைவரையும் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என பிடியாணை பிறப்பித்த நீதிபதிகள், வரும் ஜன.20-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
பின்னணி: சொத்து தகராறு விவகாரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வைத்து நரம்பியல் மருத்துவரான சுப்பையாவை கூலிப் படையினர் கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2017-இல் சாட்சிகள் மீதான விசாரணை துவங்கியது. இந்நிலையில், வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரி சுப்பையாவின் உறவினரான மோகன், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனுவை 2021-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.
அதன்படி விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கிய சென்னை அமர்வு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பாசில் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, அவர்களை விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, மருத்துவர் சுப்பையாவின் மனைவி சாந்தி சுப்பையா ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.