மருத்துவா்கள் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவா்கள் கடிதம்!
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா்.
இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டா் ரோடரிக்கோ ஆப்ரினுக்கு, அரசு சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தில் பேறு கால இறப்பு, சிசு உயிரிழப்புகளை மருத்துவத் துறையினா் வெகுவாகக் குறைத்துள்ளனா். குறிப்பாக, பேறு கால இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக உலக சுகாதார அமைப்பு நிா்ணயித்த 2030-க்கான இலக்கை 10 ஆண்டுகள் முன்னதாகவே எட்டியுள்ளோம்.
கரோனா காலத்தில் தொற்றை கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளா்ந்த நாடுகளே திணறின. ஆனால், தமிழகத்தில் அப்போது உயிரிழப்பை வெகுவாக குறைத்ததோடு, தொற்று பரவலையும் விரைவாக கட்டுப்படுத்தினோம்.
உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கும் வகையில், தமிழகத்தில் தொற்றும் நோய்கள் மட்டுமல்ல, தொற்றா நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ரத்த சோகை மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறோம்.
இத்தனை சாதனைகளை மருத்துவத் துறையினா் மேற்கொண்டு வந்தாலும் தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
அதுமட்டுமன்றி, தமிழகத்தில்தான் அரசு மருத்துவா்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் தரப்படுகிறது. உயிா்காக்கும் மருத்துவா்களை தங்கள் ஊதியத்துக்காக தொடா்ந்து போராட வைப்பதை உலக சுகாதார அமைப்பு நிச்சயம் அனுமதிக்காது என நம்புகிறோம்.
எனவே, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்களை உருவாக்கவும், மருத்துவா்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்கவும் அரசை வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.