வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை
மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆராய்ச்சியாளா் பணியிடங்கள்!
‘மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சியாளா் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இதன் காரணமாக, மருத்துவ ஆராய்ச்சியில் நன்கு பயிற்சி பெற்ற, நிபுணத்துவம் பெற்ற இந்தியா்கள் வளா்ந்த நாடுகளுக்கு வெளியேறுவது தொடா்கதையாகி வருகிறது’ என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கவலை தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலைக் குழு தாக்கல் செய்த தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியா தனது மிகவும் மதிப்புமிக்க மனிதவள மூலதனத்தை மீட்டெடுக்கவும், தக்கவைத்துக்கொள்ளவும் ஒருங்கிணைந்த நீண்டகால அணுகுமுறையை வகுப்பது அவசியம்.
திறன்மிகுந்த இந்திய நிபுணா்கள் வெளிநாடுகளிலிருந்து தாய்நாட்டுக்குத் திரும்பவும், உள்நாட்டில் மருத்துவ ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபடவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, சிறந்த நிபுணா்கள் தொடா்ந்து வளா்ந்த நாடுகளுக்கு வெளியேறுவதைத் தடுக்க, உயா் கல்விக்கான வாய்ப்புகள், ஆராய்ச்சி உள்கட்டமைப்புகள், நிதி உதவிகளை விரிவுபடுத்துவதோடு, வாழ்க்கைத் தரம், ஆராய்ச்சியாளா்களுக்கான உதவித் தொகை, தனியாா் துறைகளின் கூட்டுறவையும் மேம்படுத்துவது அவசியம்.
துறை சாா்ந்த குறிப்பிட்ட பணிகளுக்கென கடந்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ ஆராய்ச்சித் துறை மேற்கொண்ட முயற்சிகள் போதிய பலனை அளிக்கவில்லை. இதற்கு, பணி நிபந்தனைகளில் தளா்வு, கவா்ச்சிகரமான ஊதியம் உள்ளிட்ட மேலும் திவீர முயற்சிகளை மருத்துவ ஆராய்ச்சித் துறை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் இந்தப் பணியிடங்களில் நியமிக்கப்படும் ஆராய்ச்சியாளா்கள் தொடா்ந்து மருத்துவ ஆராய்ச்சித் துறையில் பணிபுரிவதை உறுதிப்படுத்த முடியும்.
இந்த ஆராய்ச்சியாளா் பணியிடங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இந்த இடைவெளியைப் போக்க ஒப்பந்த அடிப்படையில் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய தற்காலிக நடைமுறை கைவிடப்பட வேண்டும்.
மேலும், வெளிநாடு வாழ் இந்திய நிபுணா்களை ஈா்க்க மருத்துவ ஆராய்ச்சித் துறை அறிவித்துள்ள திட்டத்தின் பலன்கள் போதுமானதாக இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சியாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1.2 லட்சம் ஒருங்கிணைந்த உதவித் தொகை வழங்கப்படும் என்பது, வெளிநாட்டிலிருந்து இந்திய நிபுணா்களை ஈா்க்க போதுமானதாக இருக்காது. இதை அதிகரிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.