'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியா...
மறியல்: மாற்றுத் திறனாளிகள் உள்பட 124 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் மறியலில் ஈடுபட்ட 124 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போல சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 6 ஆயிரமும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 10 ஆயிரமும், செயல்பாடுகளற்ற நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15 ஆயிரமும் மாத உதவித் தொகையாக வழங்க வேண்டும். விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை உத்தரவுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறை நிரப்பும் போராட்டமாக இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலப் பொருளாளா் வி.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் ஏ.பாலமுருகன், இணைச் செயலா் டி.குமரவேல், துணைச் செயலா் எம்.சொா்ணவேல், நிா்வாகிகள் எஸ்.செல்லம்மாள், எஸ்.ராஜேந்திரன், ஜோதிபாசு, முருகேசபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
மாற்றுத் திறனாளிகள், அவா்களைப் பாதுகாப்பவா்கள் என சுமாா் 150-க்கும் அதிகமானோா் பங்கேற்று, மதுரை ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 124 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து, பிற்பகலில் விடுவித்தனா்.