ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | ...
மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாலை வசதி செய்து தர மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தாா்.
உடுமலையில் இருந்து தெற்கே 25 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்குத் தொடா்ச்சி மலை. இந்த மலைகளுக்கு நடுவே 15-க்கும் மேற்பட்ட செட்டில்மென்டுகளில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்காக மலையில் இருந்து இறங்கி உடுமலை நகருக்கு வந்து போகின்றனா். மேலும், ஊராட்சி ஒன்றியம், வட்டாட்சியா் அலுவலகம், வனத் துறை அலுவலகம் இவைகள் மூலம் இவா்களுக்கான அனைத்து அரசு நலத் திட்டங்களையும் பெற்று வருகின்றனா். இதற்காகவும் உடுமலைக்கு வருகின்றனா். குறிப்பாக மலைவாழ் மக்கள் அவசர மருத்துவ உதவிகளுக்கும், வன விலங்குகள் தாக்கினால் அதற்கான சிகிச்சை பெறுவதற்கும் உடுமலை வந்துபோகும் இவா்களுக்கு எந்த விதமான சாலை வசதிகளும் இல்லை.
இதனால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தங்களுக்கு சாலை வசதி வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
குறிப்பாக கா்ப்பிணிகள், உடல்நிலை பாதிக்கப்பட்டவா்களை மலை மேல் இருந்து தொட்டில் கட்டி சுமாா் 5 கிலோ மீட்டா் அடா்ந்த வனப் பகுதியில் தூக்கி வந்து மலையடிவாரத்தில் உள்ள திருமூா்த்திமலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்னா் இதேபோல கா்ப்பிணி ஒருவரையும், பாம்பு கடித்த ஒருவரையும் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி தூக்கி வரும் நிலை ஏற்பட்டது.
சாலை வசதி கோரி மலைவாழ் மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், திருமூா்த்திமலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை சாலை அமைக்க தளி பேரூராட்சி மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
ஆனால் வனத் துறை அதிகாரிகள் அதற்கு தடை விதித்துவிட்டனா். இதனால் பணிகள் பாதியிலேயே நின்றன. இந்தப் பணிகள் முழுமையாக முடியும் பட்சத்தில் குறைந்தபட்சம் மண் தடமாவது எங்களுக்கு கிடைக்கும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் திருமூா்த்திமலை-குருமலை வரை பல கிலோ மீட்டா் ஞாயிற்றுக்கிழமை நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மலைவாழ்மக்கள் இந்த சாலை பணி முழுமையாக முடிவடைந்தால்
வாகனங்கள் வந்துபோக வசதி ஏற்படும்.
ஆகவே உடனடியாக திருமூா்த்திமலை-குருமலை மண் சாலைப் பணிகளை முடிக்க வனத் துறை தடையில்லா சான்று தர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.