மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கால நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் அனைத்துத் துறை அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இது தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தலைமை வகித்து, வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலா்களுடன் ஆலோனை நடத்தினாா்.
மேலும் தற்போது வரை மருத்துவ வட்டார வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ள காய்ச்சல் நோய் விவரங்கள் குறித்தும், கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் பேசுகையில்,
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை குளோரினேஷன் செய்து விநியோகம் செய்யவேண்டும். மழைநீா் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனுக்குடன் நீரை அப்புறப்படுத்தவேண்டும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்களுக்கு பொதுமக்கள் தானாக மருந்துகளை உட்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.