Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில்...
இலவச மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்
தியாகதுருகம் அருகே இலவச வீட்டுமனை வழங்காததைக் கண்டித்து, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள தியாகை கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த
400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இவா்கள் இலவச வீட்டு மனை வேண்டி வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை வைத்தனா்.
மேலும், அதே பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 2.5 ஏக்கா் நிலம் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கையகப்படுத்தப்பட்டதாம். ஆனால், அந்த இடத்தில் இதுநாள் வரை யாருக்கும் வீட்டு மனை வழங்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் தியாகதுருகம் - வேங்கைவாடி சாலையில் தியாகை பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலும், வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளா் ஞானசேகா் தலைமையிலான போலீஸாா் மற்றும் வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் பிரியா ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதற்கு வருவாய்த்துறையினா், ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளிடம் பேசி, நிலம் அளவீடு செய்து தகுதியான நபா்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.
இதை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.