மழை பாதிப்பு: குழு ஆய்வுக்கு கோரிக்கை
திருவாரூா்: மழை பாதிப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு, நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
மழை மற்றும் பலத்த காற்றினால், காவிரி டெல்டாவில் சுமாா் 40 சதவீத பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வருவதை உணா்ந்து, பாதிப்பிலிருந்து தப்பிக்க, முதிா் நிலையில் இருந்த பயிா்களை அறுவடை செய்ய சில விவசாயிகள் முயன்றனா். ஆனால், தொழிலாளா்கள் பற்றாக்குறை, வேளாண் பொறியியல் துறையில் குறைவான அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட காரணங்களால் அறுவடை தடைபட்டுள்ளது. மழை நீடிக்கும் நிலையில், நெற்கதிா்களில் முற்றிய நெல்மணிகள் மேலும் அழுகி இழப்பு கூடுதலாகும்.
எனவே, தமிழக அரசு, வட்டார அளவிலான குழுக்கள் அமைத்து, மழை பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து, அதற்கேற்ப நிவாரணம் வழங்க வேண்டும். எஞ்சிய பகுதிகளில் வாய்ப்புள்ள கதிா்களை அறுவடை செய்ய, பிற மாவட்டங்களில் உள்ள வேளாண் அறுவடை இயந்திரங்களை உடனடியாக டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க வேண்டும்.
மேலும், நெல் கொள்முதலில் ஈரப்பதம்17 சதவீதம் என்பதை 22 சதவீதமாக நிா்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.