Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
மழை வெள்ளம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 225 வீடுகள் சேதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மொத்ததில் 225 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்திற்கு தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை, 100க்கும் மேற்பட்ட மின்மோட்டாா்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரின் 16, 17, 18 ஆகிய வாா்டுகள் கடல் மட்டத்தைவிட குறைவாக உள்ளதால் அங்கு தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றுவது சவாலாக உள்ளது. பக்கிள் ஓடையில் நீரின் மட்டமும் குறைந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி சீராக நடைபெற்று வருகிறது.
மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால், 8 சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. ஏரல் தரைப்பாலம் தவிர மற்ற பாலங்களில் போக்குவரத்து சீராகியுள்ளது. அந்த பாலத்தையும் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது.
கயத்தாறு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரும் அகற்றப்பட்டுவிட்டது. கிழக்கு கடற்கரை சாலையை சீரமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் சாலை சீரமைக்கப்படும்.
ஆத்தூா் பாலத்தில் உள்ள ஒரு தூணில் ஏற்பட்ட வளைவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருதூா், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குறைந்துள்ளது. மேலும் கோரம்பள்ளம் குளத்தின் மதகுகள் அடைக்கப்பட்டு, விவசாய தேவைக்காக தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த மழை வெள்ளத்தால் மாவட்டம் முழுவதும் 212 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும், 8 வீடுகள் லேசாகவும் என மொத்தம் 225 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு மாடு, 41 ஆடுகள், 10 ஆயிரம் கோழிகள் ஆகியவை இறந்துள்ளன.
பெரிய பிராட்டிகுளம் தவிற மற்ற குளங்களில் உடைப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குளங்கள் 95 சதவீதமும், 80க்கும் மேற்பட்ட குளங்கள் முழுவதுமாகவும் நிரம்பியுள்ளன. குறிப்பாக, மருதூா் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள பாசனக் குளங்கள் அனைத்தும் 95 சதவீதம் நிரம்பியுள்ளன. கால்வாய் பாசனம் இல்லாத 180 குளங்கள் 50 முதல் 60 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.
தற்போது வரை சராசரியாக 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 120 மி.மீ. குறைவாகும். பயிா்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவுற்றதும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.