உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!
மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்?
மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி டிஃபேன், வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

எப்படி ஆடு மாடு வளர்க்க முடியும்?
"மறுவாழ்வு திட்டம் நியாயமானதாக இல்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். கடந்த 100 ஆண்டுகளாக மூன்று தலைமுறையாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த நாங்கள் சாதி, மத பேதமின்றி உண்மையான சமத்துவபுரமாக வாழ்ந்து வந்துள்ளோம். அதைப்போன்ற வாழ்க்கைதான் எங்களுக்கு இங்கும் வேண்டும். அதனால் அரசு எங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்காமல் ஏற்கனவே அரசால் அமைக்கப்பட்ட பெரியார் சமத்துவபுரம் போன்று குடியிருப்புகளை அமைத்துத் தர வேண்டும். காரணம், நாங்கள் மாடியில் வாழ்ந்து பழக்கமில்லை. தனித்தனி வீட்டில் வாழ்ந்தவர்கள். அதுமட்டுமின்றி ஆடு, மாடு வளர்க்க அரசு நிதி வழங்க உள்ள நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் எப்படி ஆடு மாடு வளர்க்க முடியும்?
அரசு தரப்பில் இரண்டு சென்ட் இடம் வழங்குவதாக கூறினாலும், எங்களில் யார் எந்த சாதி, மதம் என்று பிரித்து அந்தந்த சாதி மக்கள் வாழும் பகுதிகளில் இடம் ஒதுக்க திட்டமிட்டுள்ளார்கள், இது எங்களுக்கு பிடிக்கவில்லை. நாங்கள் மாஞ்சோலையில் ஒற்றுமையாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். தேயிலைத் தோட்டத்தில் கடைசியாக வேலை பார்த்த நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் என 520 குடும்பத்தினருக்கும் சமத்துவபுரம்போல் வீடுகள் கட்டித் தர வேண்டும்.
வனத்தை மீண்டும் வனமாக்கும் திட்டத்தின் கீழ் வனத்திலிருந்து வெளியேறும் மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அதுபோல நூறு ஆண்டுகளாக வனத்தில் வாழ்ந்த எங்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், மறுவாழ்வுக்கு இரண்டு ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும். காடுகளை காப்பாற்றுவதில் நாங்கள் முன்மாதிரியாக இருந்திருக்கிறோம். தற்போது அரசு சொன்னதை ஏற்றிருக்கிறோம், அதற்கு, அங்கு வாழ்ந்ததுபோன்ற குடியிருப்புகளை அரசு கீழே அமைத்துத் தர வேண்டும் என்கிறோம்.
நூறாண்டுகளில் காடுகளை அழித்ததாகவோ, விலங்கு மனித மோதல் சம்பவமோ நடைபெற்றதோ கிடையாது. திருடர்களிடமிருந்து காட்டை காப்பாற்றி உள்ளோம், எங்கள் மீது எந்த வழக்கும் இதுவரை இல்லை, அப்படிப்பட்ட எங்களை புலிகளை காக்கிறோம் எனக் கூறி வெளியேற்றுவதை ஏற்க முடியாது.
உச்ச நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை விசாரிக்க உள்ள நிலையில், அரசு அதிகாரிகள் மிரட்டலாக பேசுகிறார்கள். மாஞ்சோலைக்கு காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வருகை தந்து ஒவ்வொருவரையும் மிரட்டுகின்றனர். மாஞ்சோலையில் உள்ள வனபேச்சி அம்மன் கோயிலில் 71-வது ஆண்டு கொடை விழா நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

மே 25-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர். குடியிருக்க வழியின்றி தவித்து வரும் எங்களை மிரட்டாதீர்கள். திடீரென எங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல முடியாது. பள்ளிக்கூடம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்தும் மாஞ்சோலை முகவரியில்தான் உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக எங்களை மிரட்டி வெளியேற்றி விடாதீர்கள்.
தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம்
இந்த நெருக்கடியான சூழலில் உச்ச நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம். மாஞ்சோலையில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறோம், ஆனால், அரசு எங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் அங்கு வாழ்ந்தது போன்ற சூழ்நிலையை தமிழகத்தில் அரசு அமைத்து கொடுத்தது. அவர்களுக்காக டான் டீ நிறுவனம் தொடங்கப்பட்டது. அதுபோல் இல்லாவிட்டாலும், நாங்கள் ஒற்றுமையாக, கௌரவமாக வாழ சமத்துவபுரத்தை அரசு அமைத்துத் தரவேண்டும்" என்றனர்.

மாண்புடன் வெளியேற வேண்டும்
பின்னர், ஹென்றி திபேன், ராபர்ட் சந்திரகுமார் பேசும்போது, "மாஞ்சோலையில் இன்னும் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இன்றளவும் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. மற்றவர்கள் கீழே உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கி இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்க மாஞ்சோலைக்கு சென்று வருகிறார்கள். மறுவாழ்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, இதைக் கடந்து புலிகள் காப்பக பகுதியில் என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.
ENVIRIONMENT COMMITTE அறிக்கையை இவர்கள் ஏற்றுக் கொண்டவர்கள். மறைமுகமாகவோ, திருட்டுத்தனமாக மாஞ்சோலையில் வாழ விரும்பவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை மாஞ்சோலை தோட்டத்திலிருந்து அவர்களை வெளியேற்றக்கூடாது என முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் நினைக்க வேண்டும்.
அரசு கூறிய மறுவாழ்வுத் திட்டங்கள் செயல்படுத்தும் வரை இவர்கள் எங்கு வாழ்வார்கள்? மற்றவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கும் சமூக நீதி அரசு, மாஞ்சோலை தொழிலாளர்களுக்கும் சமூக நீதியை அளிக்க முன்வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது இது போன்ற செயல்களை செய்வது தவறு என மனுதாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
மாஞ்சோலை சமத்துவபுரம் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல வற்புறுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள். மாஞ்சோலையில் உள்ள அவர்களது மூதாதையர்களின் கல்லறைகளை பார்க்க அரசு அனுமதிக்க வேண்டும். பல்வேறு மதங்களை, சாதிகளைச் சார்ந்தவர்கள் ஒன்றாக இருக்கும் சமத்துவபுரம் என்றால் அது மாஞ்சோலைதான். அவர்கள் மாண்புடன் வெளியேற வேண்டும்" என்றனர்.