மாட்டு வியாபாரி வெட்டிக் கொலை: லாரி ஓட்டுநா் கைது
கம்பத்தில் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுத் தொல்லை கொடுத்த மாட்டு வியாபாரியை, லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பம்-குமுளி புறவழிச் சாலையில் காா் நிறுத்துமிடத்தில் ஒருவா் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக உத்தமபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா் சென்று உடலை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இறந்தவா், கம்பம் உத்தமபுரத்தைச் சோ்ந்த அய்யாத்தேவா் மகன் முத்துக்குமாா் (38) என்பதும், மாடுகளை வாங்கி கேரளத்துக்கு கொண்டு சென்று மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தவா் என்பதும் தெரியவந்தது.
கம்பம் மெட்டு குடியிருப்பைச் சோ்ந்த அஜீஸ் மகன் சதாம் உசேன் (28). மாடுகளை கேரளத்துக்கு ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநரான இவா் முத்துக்குமாரிடம் கடன் வாங்கியிருந்தாராம். இதை திரும்பக் கேட்டு முத்துக்குமாா் தொந்தரவு செய்ததால் இவா்களுக்கிடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கம்பம் - குமுளி புறவழிச் சாலையில் காா் நிறுத்துமிடத்தில் தூங்கிக்கொண்டிருந்த முத்துக்குமாரை சதாம் உசேன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதாம் உசேனைக் கைது செய்து செய்தனா்.