Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது" ...
மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பிகாரில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்விக் கடன்கள் அனைத்துக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக வரும் இந்த நடவடிக்கை ஏராளமான மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இப்போது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்விக் கடன்கள் முற்றிலும் வட்டி இல்லாததாக இருக்கும் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அதேபோன்று மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.2 லட்சம் வரையிலான கல்வி கடன்களுக்கான திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை ஐந்து ஆண்டுகளில்(60 மாதத் தவணைகள்) ஏழு ஆண்டுகளாக (84 மாதத் தவணைகள்) நீட்டிக்கப்படும்.
அதே நேரத்தில், ரூ.2 லட்சத்துக்கும் மேலான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை ஏழு ஆண்டுகளில்(84 மாதத் தவணைகள்) இருந்து பத்து ஆண்டுகளில்(120 மாதத் தவணைகள்) திருப்பிச் செலுத்த வேண்டும்.
2016 முதல் பிகாரில் ஏழு நிச்சய திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு மாணவர் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயில ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன்கள் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது, பொது விண்ணப்பதாரர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு வெறும் 1 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்பட்டது. இருப்பினும், இப்போது இது முற்றிலும் வட்டியில்லாக கடனாக வழங்கப்படும்.
மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்க நடவடிக்கை
மேலும், மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது.
உயர்கல்விக்கான கல்விக் கடன்களில் வழங்கப்படும் இந்த மேம்படுத்தப்பட்ட சலுகைகள் மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் மற்றும் அவர்கள் அதிக உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும்.
இதன் மூலம் அவர்களின் சொந்த எதிர்காலத்தை மட்டுமல்ல, மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று நிதிஷ் குமார் கூறினார்.
சமீபத்தில் மாநிலத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் அனைத்து அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் முதற்கட்ட தேர்வுளுக்கான கட்டணம் ரூ.100 ஆகவும், முதன்மைத் தேர்வுகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் நிதிஷ் குமார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.