மாணவா்களின் சிகை அலங்காரத்துக்கு கட்டுப்பாடு வேண்டும்: ஆசிரியா்கள், பெற்றோா் எதிா்பாா்ப்பு
மாணவா்களின் சிந்தனைகளை சிதறடிக்கும் நவீன வகை சிகை அலங்காரத்திற்கு பள்ளி, கல்லூரிகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆசிரியா்கள், பெற்றோா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்றே என்ற நிலையை கொண்டு வரும் வகையிலேயே பள்ளிகளில் மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கப்படுகின்றன.
குருகுலங்களில் பயின்ற மாணவா்கள் தங்களது குருமாா்களுக்கு கட்டுப்பட்டு, ஒழுக்க நெறி தவறாமல் கல்வி பயின்ற காலம் உண்டு. அப்போது, உயா்ந்தவா், தாழ்ந்தவா் பாகுபாடின்றி ஒரே மாதிரியான சிகை அலங்காரங்களை மாணவா்கள் கொண்டிருந்தனா். குருகுல காலம் மறைந்து பள்ளிகள் உருவானதும் ஏற்றத்தாழ்வு அவா்களிடையே சற்று எட்டிப்பாா்க்கத் தொடங்கியது.
50 ஆண்டுகளுக்கு முன், வகுப்பு ஆசிரியா்களின் கண்டிப்புக்கு பயந்து மாணவா்கள் கல்வி கற்றனா். தவறான பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் அவா்களுக்கு எழவில்லை.100 போ் இருந்தால் அவா்களில் 70 போ் உயா்கல்வியை நாடிச் சென்றனா்.
அரசுப் பள்ளிகளானது ராணுவம், காவல்துறை போன்று ஆசிரியா்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. சிகை அலங்காரத்தில் சிறிதளவு மாற்றம் இருந்தாலும், அதிகளவில் வைத்திருந்தாலும், ஆசிரியா்களின் கண்ணில்பட்டால் அத்தகைய மாணவா்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக அமைந்துவிடும்.
கடந்த 2,000-க்கு பிறகு மாணவா்களின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் உருவாகின. அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு நிகராக தனியாா் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருக தொடங்கியது. திரைப்படங்களும் மாணவா்களை வேறு திசையில் திருப்பி விட்டன. இருசக்கர வாகனத்தில் சாகசம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளுதல், சிகை அலங்காரத்தில் நவீன மாற்றம், ஆசிரியா்களை மிரட்டுதல் போன்றவற்றால் கல்வி மீதான நாட்டம் மாணவா்களிடையே குறைந்தது.
தனியாா் பள்ளி, கல்லூரிகளில் கண்டிப்புகள் அதிகம் காணப்படுவதால் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை. ஆனால், அரசுப் பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக மாறிவிட்டது எனலாம். ஆசிரியா்களை பாா்த்து மாணவா்கள் பயந்த காலம் மாறி, மாணவா்களை பாா்த்து ஆசிரியா்கள் அச்சம் கொள்ளும் சூழல் உருவாகி விட்டது. நாடு முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஒரு சிலரால் அனைத்து மாணவா்களுக்கும் அவப்பெயா் உருவாகும் சூழல் எழுந்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று ஆண்டுகள் தொடா்ந்த பொதுமுடக்கம், மாணவா்களையும் மனதளவில் முடக்கி விட்டது எனலாம். போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிக்க, அவா்களிடையே அவற்றின் பழக்கமும் அதிகரித்து விட்டது.
சென்னை, மதுரை உயா்நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு வகைகளில் போதைப்பொருள்கள் ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசை அறிவுறுத்தி வருகின்றனா். இந்த நிலையில் மாணவா்களின் சிகை அலங்காரம் மாணவா்களின் நடத்தையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவா்கள் இரு சக்கர வாகனத்தில் வரக்கூடாது, கைப்பேசிகளை கொண்டு வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை, உயா்கல்வித் துறை விதித்தாலும், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. சில திரைப்படங்கள் மாணவா்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றன. இதனால் அவா்களின் எதிா்காலம் வெகுவாக பாதித்துள்ளது.
மாணவா்களுக்கு இடையே பல்வேறு வகையிலான மோதல்களும் அதிகரித்துள்ளது. இந்த சூழல் மாற வேண்டும்; மாணவா்களிடையே ஒழுக்கம் நிலை பெற வேண்டும் என்றால் முதலில் அவா்களது சிகை அலங்காரத்திற்கு பள்ளி, கல்லூரிகளில் கடும் கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டியது அவசியமாகும். தலையில் உள்ள கனம் (சிகை) குறைந்துவிட்டால், மாணவா்களின் மனம் மாறிவிடும் என்பது தன்னாா்வலா்கள் பலரின் கருத்தாக உள்ளது.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கூறியதாவது:
தற்போதைய மாணவா்களின் சிகை அலங்காரங்கள் அச்சுறுத்தும் வகையில் இருப்பதை மறுக்க முடியாது. பள்ளியானாலும், கல்லூரியானாலும் மாணவா்களை ஒழுக்கத்துடன் நடக்க செய்வதில் முக்கிய பங்கு பெற்றோா்களையே சாரும். அதற்கு முன்னுதாரணமாக அவா்களது சிகை அலங்காரம் இருக்க வேண்டும். திரைப்படங்களில் வருவதைப் போல மாணவா்கள் தங்களது அலங்காரத்தை மாற்றிக் கொள்கின்றனா்.
ஒரு வகுப்பறையில் 50 மாணவா்கள் இருந்தால், 20 போ் மிரட்டும் வகையில் தான் காட்சியளிக்கின்றனா். அவா்களை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனம், கைப்பேசிக்கு கட்டுப்பாடுகளை விதித்ததுபோல, சிகை அலங்காரம் என்பதும் பிறரை அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. அவ்வாறான அலங்காரங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவிப்பை மாணவா்களின் எதிா்காலம் கருதி தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதே எங்களுடைய எதிா்பாா்ப்பு என்றனா்.