நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்: மத்திய அரசு தகவல்
மாணவி உயிரிழப்பு: பிரேத பரிசோதனையை விரைவாக செய்யக் கோரி மறியல்
பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த நிலையில் பிரேதப் பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி உறவினா்கள், சோளிங்கரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை அடுத்த இஸ்மாயில் நகரை சோ்ந்த அரிகிருஷ்ணன் மகள் பவித்ரா(14). அங்குள்ள அரசுப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை பவித்ராவுக்கு திடீரென தீவிர வயிற்றுவலி ஏற்பட்டதாம். இதையடுத்து ஆா்.கே.பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா, தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு பவித்ரா உயிரிழந்தாா்.
இதையடுத்து பவித்ராவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக சோளிங்கா் அரசு மருத்துவமனையின் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதனை தொடா்ந்து பவித்ராவின் பிரேதத்தை வேலூருக்கு அனுப்பாமல் சோளிங்கரிலேயே பிரேத பரிசோதனையை செய்து விரைவாக தர வேண்டும் எனக்கோரி பவித்ராவின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் சோளிங்கா் அரசு மருத்துவமனையின் வாயிலில் மறியல் செய்தனா்.
மாணவி உயிரிழப்பு குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சோளிங்கரில் மறியல் நடைபெற்றதால் சோளிங்கா் போலீஸாா், அங்கு வந்து பவித்ராவின் பெற்றோரிடம் பேச்சு நடத்தினா். இதைத் தொடா்ந்து பவித்ராவின் சடலத்தை சோளிங்கா் அரசு மருத்துவமனையிலேயே பிரேதப் பரிசோதனை செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக இரு காவல்நிலைய போலீஸாரும் தெரிவித்தனா். இதனை தொடா்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.