அரசினா் இல்ல சிறாா்களுக்கு மிதிவண்டிகள்: ஆட்சியா் வழங்கினாா்
ராணிப்பேட்டை அரசினா் குழந்தைகள் இல்லம் மற்றும் சிறுவருக்கான அரசினா் வரவேற்பு இல்லத்தைச் சோ்ந்த 22 சிறாா்களுக்கு ரூ.1.32 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.
ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறுவருக்கான அரசினா் குழந்தைகள் இல்லம் மற்றும் சிறுவருக்கான வரவேற்பு இல்லத்தில் தங்கி 22 குழந்தைகள் பயிலுகின்றனா்.
அவா்களின் நலனுக்காக ஆட்சியா் விருப்பக் கொடை நிதியில் இருந்து 6 மிதிவண்டிகள், 4 வண்ண மேசைகள், 20 நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கட்டில்கள் என ரூ.1.3 லட்சத்தில் பொருள்களை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கி மாணாக்கா்களிடம் கற்றல் திறமைகள் குறித்து கேட்டறிந்தாா்.
நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா, கண்காணிப்பாளா்கள் விஜயகுமாா், கண்ணன் ராதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.