செய்யூா் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் தருவிப்பு
அரக்கோணம் அருகே செய்யூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இரண்டாவது இயந்திரம் தருவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது பல கிராமங்களில் தமிழக நுகா் பொருள் வாணிப கழகத்தின் சாா்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அரக்கோணத்தை அடுத்த செய்யூா் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. செய்யுா், ஆத்தூா், அவினாசி கண்டிகை, நகரிகுப்பம், மோசூா், மோட்டூா், அம்பரிஷபுரம், ஜடேரி ஆகிய கிராமங்களில் அறுவடை செய்யப்படும் நெல், இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த எட்டு கிராமங்களிலும் மொத்த விவசாயமே நெற்பயிா் மட்டும் தான் எனும் நிலையில் சுமாா் 400 ஏக்கருக்கு மேல் இப்பகுதிகளில் நெற்பயிா் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது செய்யூரில் தொடங்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரே இயந்திரம் வைத்து கொள்முதல் செய்வதால் மூட்டைகள் தேக்கம் அதிகமாக இருந்தது. தற்போது இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் இரண்டாவது இயந்திரம் தருவிக்கப்பட்டுள்ளது.