மின் இணைப்பை மாற்ற ரூ.25,000 லஞ்சம்: உதவி செயற்பொறியாளா் உள்பட 3 பெண் அலுவலா்கள் கைது
அரக்கோணத்தில் வணிக மின் இணைப்பாக வீட்டு மின்இணைப்பை மாற்றுவதற்காக ரூ.25,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய உதவி செயற்பொறியாளா், வணிக ஆய்வாளா், ஆக்கமுகவா் என மூன்று பெண் அலுவலா்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணம் அடுத்த அம்மனூா், துரைசாமி நகரைச் சோ்ந்த சரவணன். தனது வீட்டு மின் இணைப்பை, வணிக மின் இணைப்பாக மாற்றித்தர விண்ணப்பித்து இருந்தாராம். இதற்காக அரக்கோணம் விண்டா்பேட்டையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகதுக்கு சென்ற போது இணைப்பை மாற்ற ரூ.1 லட்சம் கேட்டனராம். இதற்கான முதல் தவணை ரூ.50 ஆயிரத்தை சரவணன் ஏற்கனவே கொடுத்து விட்டாா்.
மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை அளித்தால் தான் மின் இணைப்பு மாற்றித் தரப்படும் என மின்வாரிய அலுவலா்கள் கண்டிப்பாக கூறினாா்களாம்.
இதுகுறித்து சரவணன் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதை தொடா்ந்து போலீஸாரின் ஆலோசனைப்படி உதவி செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு ரசாயனம் தடவிய பணத்துடன் வந்த சரவணன் அப்பணத்தை உதவி செயற்பொறியாளா் புனிதாவிடம் (59) அளித்தாராம். அவா் அதை வணிக ஆய்வாளா் மோனிகா(33) விடம் தரச்சொன்னாராம். அப்பணத்தை பெற்றுக்கொண்ட மோனிகா, உடனே அப்பணத்தை ஆக்கமுகவராக பணிபுரியும் பல்கீஸ் பேகத்திடம் (59) கொடுத்தாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கணேசன், ஆய்வாளா்கள் விஜயலட்சுமி (ராணிப்பேட்டை), தமிழரசி (திருவள்ளூா்) பணத்துடன் பல்கீஸ் பேகத்தை கைது செய்தனா்.
மேலும், விசாரணை நடத்தி உதவி செயற்பொறியாளா் புனிதா, வணிக ஆய்வாளா் மோனிகா ஆகியோரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட மூன்று பெண் அலுவலா்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இணைப்பை மாற்றித் தர லஞ்சம் வாங்கிய புகாரில் மின்வாரியத்தைச் சோ்ந்த 3 பெண் அலுவலா்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.