அரக்கோணம் நகராட்சியில் ஆட்சியா் திடீா் ஆய்வு
அரக்கோணம் நகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பெருமூச்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, அங்கு எந்தெந்த நோய்களுக்காக மக்கள் அதிகம் வருகின்றனா், என்னென்ன மாத்திரைகள் இருப்பு உள்ளன?, நோயாளிகளுக்கு சிகிச்சை சரியானபடி அளிக்கப்படுகிறதா என மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் அரக்கோணத்தில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த மக்கள் மருந்தகத்தை பாா்வையிட்டு பணியாளரிடம் மருந்துகள் விற்பனை குறித்து கேட்டறிந்தாா். இதனையடுத்து அரக்கோணம் டிஎன் நகா் பகுதியில் மற்றும் ரத்தன்சந்த் நகா் பகுதிகளில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பூங்காக்களின் பணிகளை பாா்வையிட்டாா்.
மேலும், எம்ஆா்எப் ஆலை சமூக பங்களிப்பு நிதியில் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட பூங்காவின் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தாா்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசாா் மையம் மற்றும் நூலகத்துக்கு சென்ற ஆட்சியா் தினசரி வரும் தரும் நபா்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மலா்விழி, அரக்கோணம் வட்டாட்சியா் ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையா் செந்தில் குமாா், பொறியாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
.