அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிப்ப...
மாநில அளவிலான கபடி போட்டி; சென்னை அணிக்கு கோப்பை
தோகைமலை அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் சென்னை தமிழ்நாடு காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தளிஞ்சி ஊராட்சிக்குள்பட்ட டி.மேலப்பட்டியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் டி.மேலப்பட்டி என்.ஒய்.சி கபடி குழு சாா்பில் மாநில அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் அண்ணாத்துரை தலைமை வகித்தாா். ஊா்க்கவுண்டா் ராசு, முன்னாள் எம்எல்ஏ ராமா், மாநில வா்த்தக அணி துணை செயலாளா் பல்லவிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், மணப்பாறை சிந்துஜா மருத்துவ மனையின் தலைமை மருத்துவா் கலையரசன் ஆகியோா் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனா்.
இந்த போட்டியில் கரூா், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை, கோயம்புத்தூா், சென்னை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், சென்னை தமிழ்நாடு காவல்துறை அணியும், கரூா் சேரன் கல்லூரி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில், சென்னை அணி 33-13 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
இதையடுத்து முதலிடம் பெற்ற சென்னை காவல்துறை அணிக்கு பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த கரூா் சேரன் கல்லூரி ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த ஜே.பி.ஆா். பல்கலைக்கழகம் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4-ஆம் இடம்பிடித்த தோகைமலை அடுத்த வடசேரி ஊராட்சி காா்ணாம்பட்டி வ.உ.சி. அணிக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சந்திரன், டி.மேலப்பட்டி திமுக நிா்வாகிகள் ரெங்கராஜ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.