பொய்யான தகவல்களை கூறி சோ்க்கை: தனியாா் செவிலியா் கல்லூரியில் பயின்ற மாணவிகள் கரூா் ஆட்சியரிடம் புகாா்
பொய்யான தகவல் கூறி செவிலியா் கல்லூரி நடத்தி வரும் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு பயின்ற மாணவிகள் திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாரியம்மன் கோயில் அருகே செயல்படும் தனியாா் செவிலியா் கல்லூரியில் பயின்ற மாணவிகள் சிலா் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். அம்மனுவில் கூறியிருப்பது: கரூா் மாரியம்மன் கோயில் அருகே உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் பயின்று வருகிறோம். இங்கு மயக்கவியல் நிபுணா் உதவியாளா், லேப் டெக்னீசியன் போன்ற படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. இங்கு பிஎஸ்எஸ் எனப்படும் மூன்றாண்டு படிப்பு படித்தால் வேலை வாய்ப்பு எளிதில் கிடைக்கும் எனக்கூறி விளம்பரப்படுத்தியதால் இந்த படிப்பில் சோ்ந்தோம்.
இந்நிலையில் இரண்டாண்டு முடிந்த நிலையில் வழங்கப்பட்ட பிஎஸ்எஸ் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றபோது அந்த சான்றிதழை பதிவு செய்ய முடியாது எனக்கூறி விட்டனா்.
ஆகவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய இயலாத சான்றிதழ் வழங்கிய செவிலியா் கல்லூரி உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
தாா்சாலை அமைக்க வேண்டும்: கரூா் சக்தி பண்ணை இல்லம் பகுதியைச் சோ்ந்த மு.சத்தியமூா்த்தி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், கரூா்-திண்டுக்கல் பிரதான சாலையின் தாந்தோணிமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கணபதிபாளையம், காமராஜ் நகா், சக்திபுரம், சிவாஜிநகா், மகாலட்சுமி நகா் வழியாக கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காந்திகிராமம் வரையில் பிரதான சாலை உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இச்சாலையை தாா்சாலையாக மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 599 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 26 பேருக்கு ரூ.4.51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.