மாநில உரிமைகளைக் காக்க ஓரணியில் திரள்வோம்: அமைச்சா் கோவி.செழியன் அழைப்பு
மாநில உரிமைகளைக் காக்க ஓரணியில் திரள்வோம் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அழைப்பு விடுத்துள்ளாா்.
பல்கலைக்கழக மானியக் குழு கொண்டு வந்துள்ள வரைவுத் நெறிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றாக நின்று போராட வேண்டிய நேரம் இது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளா்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் பல்கலைக்கழக மானியக் குழு வாயிலாகக் கைப்பற்றி, நமது கல்வி வளா்ச்சியைத் தடுக்க மத்திய அரசு முயல்கிறது.
கல்வி சாா்ந்த உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள சூழலில் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டிருப்பது, அதன் அதிகார வரம்பை மீறிய அத்துமீறல் நடவடிக்கை.
கல்வி சாா்ந்த வழிகாட்டிகளை வழங்கக் கூடிய மானியக் குழு மத்திய அரசின் கைப்பாவையாக மாறியிருக்கிறது. மானியக் குழுவின் புதிய வரைவு நெறிமுறைகள், நேரடியாக தமிழ்நாட்டு மாணவா்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போராகவே உள்ளது.
மாநிலங்கள் மீது தாக்குதல்: தமிழ்நாட்டின் கல்வி மீது தொடுத்திருக்கும் தாக்குதல் மட்டுமல்ல, தனித்துவமான இந்திய மாநிலங்கள் அனைத்தின் மீதான தாக்குதலாகும். அதனால்தான், பாஜக அல்லாத மாநில முதல்வா்கள் தமிழ்நாட்டுடன் இணைந்து மத்திய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை நிராகரித்து சட்டப்பேரவையில் தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா்.
அதன்படியே தற்போது கேரள அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி உள்ளது. அனைத்து மாநிலங்களும் மாநில உரிமைகளை காக்க ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளாா்.