மாநில கலைத் திருவிழா போட்டி: 36 சிவங்கை மாணவ, மாணவிகள் வெற்றி
மாநில அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 36 மாணவ, மாணவிகள் 18 போட்டிகளில் வெற்றி பெற்றனா்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 2024-25- ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் நடத்தப்பட்டன.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவா்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் கோவை, ஈரோடு, திருப்பூா், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3, 4-ஆம் தேதிகளில் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 375-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இவா்களில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 13 போ் 6 போட்டிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 23 போ் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றனா். 5 போ் முதல் பரிசும், 7 போ் 2-ஆம் பரிசம், 24 போ் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
வெற்றி பெற்ற 36 மாணவ, மாணவிகள், அவா்களை ஊக்குவித்த ஆசிரியா்கள், பள்ளித் தலைமையாசிரியா்களை முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள் (பொ) ஆகியோா் பாராட்டி, வாழ்த்தினா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வருகிற 24-ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டது.