குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
மார்பிலே பட்ட காயம்! - ஒரு ராணுவ வீரரின் கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
1970களில் ஆனந்த விகடனில் வெளியான வாசகர் கதை இது. இந்த சிறுகதை ரூ.1500 பரிசையும் வென்றது. வாசகர் பால விஸ்வநாதன் எழுதிய இந்த சிறுகதையை மை விகடன் பக்கத்திற்காக காந்திமதி உலகநாதன் தொகுத்து வழங்கியுள்ளார்.
நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. இன்று நடந்தாற்போல் இருக்கிறது. அம்மா தன் ஆபீஸ் அறையில் வெளியே அனுப்பிய காஸ் சிலிண்டர்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.
அம்மாவின் முகமோ நான்கு வருடங்களைப் பத்தாகக் காட்டியது..
அம்மாவா இவள்? முன்பு நாங்கள் சேர்ந்து வெளியில் சென்று வரும் போதும் என் சிநேகிதிகள் அக்காவா என்று கேட்பார்கள். அப்படி ஒரு தோற்றம். அப்பாவிடம் சென்று சிணுங்குவேன்.
அவரோ கடகட வென சிரித்துவிட்டு, "அதென்னவோ பிந்து! நான் உன் அம்மாவைப் திருமணம் செய்து கொண்ட போது எங்களிடையே எட்டு வயது வித்தியாசம் இருந்தது. இப்போது நீயே பார்க்கிறாயே! இருபது வயது சிறியவளாகத் தெரியவில்லையா?இந்த இளமை ரகசியத்தை கண்டிப்பாக உன் அம்மாவிடமிருந்து கற்றுக்கொள்", என்பார்.
என் அப்பா, டியர் டாடி, ஓ! நினைப்பே நெஞ்செல்லாம் இனிக்கிறது. அருவி கொட்டியது போல எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்.
விளையாட்டும் கண்டிப்பும் மிக நேர்த்தியான முறையில் அவரிடம் கலந்திருந்தன. அடிக்கவும் அணைக்கவும் ஏற்ற உறுதியான நீண்ட கரங்கள்.
நடை உடை பாவனை பேச்சு பழகும் முறை எல்லாவற்றிலும் ஆர்மிக்காரர்களின் முத்திரை இருக்கும் . என்ன பர்சனாலிட்டி! விறைத்து நிற்கும் மீசையும் நிமிர்ந்த மார்பும் பரந்த தோள்களும் கூர்மையான சிறிய மின்னும் கண்களும் ஆறடி உயரத்துக்கு ஆஜானுபாகுவாக என் அப்பா சந்தேகம் இல்லாமல் ஆண் அழகன்தான். அம்மாவுக்கு அப்பா ஹீரோ. அப்பாவுக்கும் மனைவி டார்லிங் மதுவின் பெருமைதான் .
அப்பாவின் கம்பீரமும் அம்மாவின் நளினமும் அவர்களை நண்பர்களிடையே மேட் ஃபார் ஈச்சதர் கப்பிள் என்று சொல்ல வைத்தன.
இப்போது அம்மா களைத்து காணப்பட்டாலும் நளினத்துடன் ஒரு கம்பீரம் கலந்து தெரிகிறாள். டெலிபோனில் ஏதோ பேசிவிட்டு அன்றைய வேலை முடிந்து விட்ட திருப்தியுடன் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்கிறாள் நானும் தனியே எத்தனை நேரம் உட்கார்ந்து படிக்க முடியும்!
தங்கை இந்து எதிர் வீட்டில் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பாள் அதோ இந்துவின் சிரிப்பு எங்கே கேட்கிறது.
அப்பா வேலை விஷயமாக டூர் போய்விட்டால், அந்த நாட்களை சபித்த நாங்கள் இப்போது அவர் இல்லாமல் 4 ஆண்டுகளை கழித்து விட்டோம் எப்படி விரட்டினாலும் நிறுத்தினாலும் நாட்கள் ஒரே சீராகத் தான் போகின்றன.
இதோ அப்பா வந்து விடுவார்! என்று கார் சத்தம் கேட்டாலே ஓடிப் போய் பார்ப்போம் இப்போது அவர் வரவே மாட்டார் என்று தெரிந்து எங்கோ எதையோ எதிர்பார்த்து நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.
அந்த நாட்களில் அப்பா வெளியூர் போய் வந்து விட்டால் போதும் ஷேர்சிங் அப்பாவின் பெட்டிகளை கொண்டு வந்து வைப்பான். அவ்வளவுதான்.
நானும் இந்துவும் அதைக் குடைந்து எங்கள் பெயர் போட்டு அழகாக கட்டப்பட்டிருக்கும் பரிசுகளை எடுத்துக் கொண்டு, தேங்க் யூ டாடி! அம்மாவுக்கு என்ன! என்போம் அம்மாவுக்கு இல்லாத பரிசோ "அதெல்லாம் தனிமையில்தான் "என்று கண் சிமிட்டுவார் ஷேர் சிங் அப்பாவுக்கு பிடித்த முறையில் டீயும் பிஸ்கட்டும் ட்ராலியில் வைத்துக்கொண்டு வருவான்.
"பார்த்தாயா! இந்த வீட்டில் என்னை கவனிக்க இந்த ஷேர்ஷிங் ஒருவன் தான் அவன் கை டீயே மணக்கிறது சபாஷ் ,ஷேர் சிங்! "என்று முதுகில் ஒரு தட்டு. ஷேர்சிங் குழைந்துவிடுவான். ஸாப் ஸாப் என்று விசுவாசம் உள்ள நேர்மையான பஹாடி அவன்.
"அம்மா எங்கே தன் அந்தபுரத்துக்கு போய் விட்டாளா! நான் வந்த உடனே சமையலறைக்கு ஓடி விடுகிறாள்!"
அம்மாவோ ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி ஷேர் சிங் உதவியுடன் அப்பாவுக்கு பிடித்த ஐட்டங்களாக சிக்கன் பிரியாணி, சூப் என்று கம கம எனறு தயார் செய்து வீட்டையே மணக்க வைப்பாள்.
அப்பாவும் "இப்படி சமைத்து போட்டு என்னை கெடுத்து விட்டாள் அம்மா வெளியில் சென்றால் ஒன்றுமே ருசிக்கவில்லை" என்பார்.
"பிந்து, குக்கரில் சத்தம் வருகிறது பாரம்மா!" என்று கூறியபடி அம்மா தன் ஆபீஸ் அறையை மூடிவிட்டு உள்ளே வருகிறாள்.
"இதோ போகிறேன் ,இந்துவை கூப்பிடட்டுமா? நிம்மியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள் சரியான கேரம் பைத்தியம் ."
"அவள் கவலையில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கட்டும். "
பாவம் அம்மா! அவளுக்கே விளையாட்டுகளில் ரொம்ப ஈடுபாடு உண்டு. இப்போது போலவா இருப்பாள்.
மத்தியான வேளைகளில் எங்கள் வீட்டில் பெண்மணிகளின் கொட்டம் தான். ரம்மி, பிரிட்ஜ் ,மாஜாங் என்று வீடு அமர்க்களப்படும் பாவம் ஷேர் சிங்! சுடச்சுட பஜ்ஜி ,பகோடா, சிப்ஸ், டீ என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பான் . அப்பா வந்தவுடன் அம்மா ஜெயித்த இரண்டு ரூபாய்க்காக காரில் எங்கோ கூட்டிக்கொண்டு போய் பத்து ரூபாய் செலவழிப்பார்.
மதுவுக்கு தோல்வியே கிடையாது என்னிடம் சண்டை போட்டாலும் வெற்றி ஜெனரல் மதுவுக்குத்தான் என்பார். அப்பா பிரிகேடியரானதால் அம்மாவை ஒரு ரேங்க் அதிகமாக வைத்து ஜெனரல் என்றுதான் சொல்வார் எப்போதாவது அம்மா தோற்று விட்டால் முகம் தொங்கிவிடும் அம்மாவின் மூடை சரி செய்ய அப்பா உடனே சினிமாவுக்கு கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார்.
'மம்மி ', இதோ இந்து ஓடி வருகிறாள்.
"நிம்மி வீட்டில் எல்லோரும் படத்திற்கு போகிறார்கள் என்னையும் ரொம்ப கூப்பிட்டாள் நான் உன்னோடு தான் போவேன் என்று சொல்லிவிட்டேன் போகலாமா கிளம்பேன் ,'என்று அம்மாவைத் தாஜா செய்கிறாள்.
"இன்றைக்கு களைப்பாக இருக்கிறது நாளைக்கு கண்டிப்பாக போகலாம்" என்று அம்மா சொல்கிறாள்.
தொங்கிய முகத்துடன் இந்து பாடப் புத்தகங்களுடன் அமர்ந்திருக்கிறாள்.
பாவம் அம்மாவுக்கு ஓயாத வேலை. பழக்கம் இல்லாத உழைப்பு. டீ போட்டுக் கொண்டு வந்து அம்மாவிடம் நீட்டுகிறேன். மேம்ஸாப்பை உபசரிக்க இப்போது ஷேர் சிங் இல்லை.
"பிந்து! தாங்க்யூ! ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா? "
"இல்லைம்மா! வந்தால் சொல்ல மாட்டேனா?"
"எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள். நமக்கு எழுத நேரம் வேண்டாமா? ", அம்மா தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறாள்.
முன்பெல்லாம் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து கடிதங்களாவது வரும். படிப்படியாக குறைந்து கடிதங்கள் வருவதே துர்லபம் என்று ஆகிவிட்டது. அதோ இந்து மேஜை மேல் தலையைக் கவிழ்த்து தூங்கிவிட்டாள். வீடே நிசப்தமாக இருக்கிறது.
எப்படி இருந்தது அப்போது! பிரிகேடியர் நாயர் வீடு என்றாலே உற்சாகமும் கேளிக்கையும் கரை புரண்டு ஓடும் என்றுதான் சொல்வார்கள்.
பணத்தை வாரி இறைப்பதில்அப்பாவுக்கு நிகரே இல்லை.எது வேண்டுமானாலும் அப்பாவைக் கேளுங்கள் என்பாள் அம்மா. பணம் இருந்துவிட்டால் கேட்டதெல்லாம் கிடைக்கும்.. இல்லையென்றால் அதே சிரிப்புடன் கையை விரித்து விடுவார்.
இந்துவை எழுப்பி நாங்கள் மூவரும் சாப்பிட அமர்கிறோம். அப்பாவின் இடம் காலியாக இருக்கிறது. அதென்னவோ அம்மா தினமும் அங்கும் ஒரு பிளேட்டை வைத்து விடுவாள். நாங்கள் அதை தடுத்ததும் இல்லை. ஏதோ பேசி மௌனத்தைக் கலைக்கிறேன். இயற்கையாக இல்லையே.
"இந்து! சரியாக சாப்பிடு. நாளை சினிமாவுக்கு போகும் போது உனக்கு சல்வார் வேண்டுமென்றாயேஅதையும் வாங்கி வருவோம் "என்று கூறுகிறாள் அம்மா.
இந்துவின் கூரிய சிறிய கண்களில் சிரிப்பு.
அதே கைகளுடன் அம்மாவைக் கட்டிக் கொண்டு விட்டாள்.இந்து எல்லாமே அப்பா மாதிரி இருப்பதாக தோன்றுகிறது எனக்கு.
மடமடவென்று சாப்பிடும் அவள் சுறுசுறுப்பை பார்த்துச்சிரித்துக்கொள்கிறேன்.
அம்மா கெட்டிக்காரி. இல்லையென்று சொல்லாமல் திட்டமிட்டு செலவு செய்கிறாள். எல்லாம் அனுபவம் தந்த பாடம்.
எவ்வளவோ மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருந்த போதுதான் இந்தியா பாகிஸ்தான் யுத்தம் துவங்கியது. அம்பாலாவே போர்க்கோலம் பூண்டு விட்டது. ஸைரன், ப்ளாக் அவுட் எல்லாமே அத்துபடியாகிவிட்டன.
அப்பாவின் கண்களில் அசாதாரண துடிப்பு. திரண்ட தோள்களில் தினவெடுத்ததோ. அப்பாவின் கவனமெல்லாம் போரில். மற்றவை அதன்பின்னே மறைந்துவிட்டன. யுத்த விமானங்களின் சத்தமும் ஜீப்களின் போக்குவரத்தும் நம்முள்ளே ஒரு திட நம்பிக்கையையும் வீரத்தையும் தூண்டின.
அப்பாவுக்கு அழைப்பு வந்துவிட்டது.
டெலிஃபோனைக் கீழே வைத்துவிட்டு 'ஷேர் சிங் !'என்று கர்ஜித்தார்.
பழக்கப்பட்ட ஷேர் சிங் புரிந்து கொண்டு அப்பாவின் தேவைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டான்.
இந்துவுக்கு ஒரே குஷி . பக்கத்து வீட்டு சிறுமியிடம், "என் டாடி சண்டையில் டுமீல் டுமீல் என்று சுட்டு எதிரிகளை கொன்று விட்டு வரப் போகிறார்",
என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அம்மா மிகவும் கலக்கமாக இருந்தாள். கண்களில் கண்ணீர் தளும்பியது.
எனக்கு இனம் புரியாத வேதனை. அம்மாவைப் போல் அழவும் வெட்கம். இந்துவைப் போல் சிரிக்கவும் முடியவில்லை.
"டேக் இட் ஈஸி டாமிட்பா !"அம்மாவின் கண்ணீரைத் துடைத்து விட்டார்அப்பா.
இது அப்பாவினுடைய மன வலிமையைக் காட்டும் எனக்கு பிடித்த வாக்கியம்.
அம்மா பூஜை அறைக்குள் நுழைந்து விட்டாள். ஊதுவத்தி மணத்தது. பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.
குருவாயூர் கிருஷ்ணனும் ஐயப்பனும் எல்லாவற்றையும் அறிந்தும் அப்படியேதான் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முக்கோண வடிவிலான ஒரு சிவப்புத் துணியைத் தட்டில் வைத்து கற்பூரத்துடன் அப்பாவின் முன்னே நீட்டினாள். அப்பா அந்த துணியைத் தொட்டு கற்பூரத்தை ஒற்றிக்கொண்டார்.
அப்பா பூஜை செய்ததே கிடையாது ஆனால் அம்மாவின் பூஜையிலும் பக்தி விவகாரங்களிலும் தலையிடவே மாட்டார்.
"இன்று நம் நாட்டில் பக்தியும் கலாச்சாரமும் இந்த நிலையில் இருப்பது நமக்கு பெருமையானால் அதன் முழு பொறுப்பு அம்மா போன்ற பெண்மணிகளுடையதுதான்", என்று மனம் நெகிழ சொல்லுவார்.. அம்மா பூஜை அறையில் இருந்து வெளியேறினாள்.
"பிந்து ,பூஜை அறையை நாளைக்கு நன்றாக சுத்தம் செய். நாளைக்கு அப்பாவின் பிறந்தநாள். அப்பேர்ப்பட்ட ஒரு உத்தமமான வீரருடன் எனக்கு இத்தனை மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுத்தாரே கடவுள் யுகம் யுகமாக அப்பாவுடன் வாழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அப்பா நம்மை விட்டு எங்கே போய்விட்டார்? இங்கேதான் இருக்கிறார்." அம்மாவின் கண்கள் எதிர் அறையில் மாட்டப்பட்டிருக்கும் அப்பாவின் யூனிஃபாரத்தை பாசத்துடன் பார்த்தன.
ஷேர் சிங் உதவி செய்ய அப்பா தன் யூனிஃபாரத்தை அணிந்து கொண்டார் நிமிர்ந்த மார்பில் கலர் ரிப்பன்களின் வரிசை- பளபளவென்று பட்டன்கள் - மொடமொடக்கும் உடை.
இந்த நிலையில் அப்பாவை நாங்கள் அதிகம் தொட்டுக் கூட பேசமாட்டோம். சாதாரண உடையா அது?
அம்மா மட்டும் காலர் பட்டன் எதையாவது சரி செய்து விடுவாள். அது அவள் உரிமை.ஏகபோக உரிமை.
"ஜெனரல் மதுவுக்கு மட்டும் என் உடையில் ஏதாவது ஒரு குறை தெரியும். ஜெனரல் சாப் எல்லாம் சரியாக இருக்கிறதா!" என்று லெஃப்ட் ரைட் நடந்து காட்டுவார். அதே உடையில் அப்பா நின்றிருந்தார்.
"மது எல்லாம் சரியாக இருக்கிறதா ?" அம்மா கனவில் நடப்பது போல நடந்து வந்து அப்பாவின் தோள் பட்டை பட்டனைத் தடவிவிட்டு அப்பாவின் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டாள். கண்ணீர் பெருகியது. அப்பாவும் சிறிது வித்தியாசமாகவே காணப்பட்டார்.
"டேக் இட் ஈஸி டாமிட்பா!" என்று அம்மாவின் தலையை வருடியபடி உடைந்த குரலில் சொல்லி விட்டு ஒரு போலிச் சிரிப்பு சிரித்தார்.
அந்த உடையுடன் யாரையுமே தொடாத அப்பா இந்துவை அப்படியே தூக்கிப் போட்டு முத்தமாரி பொழிந்தார்.
இந்துவும் மீசை குத்துகிறது என்று வழக்கம் போலவே அழகு காட்டினாள்.
கிளம்பும் சமயம் வந்து விட்டது.
"குருவாயூர் அப்பனை நினைத்துப் புறப்படுங்கள் . அவன் துணை நிற்பான்" என்று அம்மா தழதழக்க சொன்னாள்.
"மது , எதிரிகளை சின்னாபின்னமாக்கி வெற்றியுடன் இந்தியா வந்து உன்னிடம் சரணாகதி அடைந்து விடுகிறேன். சரிதானே!" கலகலவென்று ஒரிஜினல் சிரிப்பு வந்துவிட்டது.
"ஒகே பிந்து! டேக் கேர் ஆஃப் மம்மி "என்று என் தலையைப் பிடித்து ஆட்டினார்.
அப்பாவின் கன்னத்தில் உதடுகள் நடுங்க முத்தமிட்டேன்.
அம்மாவை அணைத்துக்கொண்டு அப்படியே ஜீப் வரை சென்றார். கடமை ஒன்றையே அறிந்த ஷேர் சிங் எல்லாம் தயாராக செய்துவிட்டு ஸாப்புக்காக ஜீப் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்பா ஜீப்பில் உட்கார்ந்த உடன் கம்பீரமாக நின்று அப்பாவுக்கு சல்யூட் அடித்தான் ஷேர்சிங். பதில் சல்யூட்டுடன் அப்பாவின் ஜீப் கிளம்பியது. நாங்கள் மூவரும் போர்ட்டிகோவில் நின்றிருந்தோம். ஜீப் திருப்பத்தில் மறையும் வரை கைகளை ஆட்டிக் கொண்டிருந்தோம்.
திருப்பங்கள். ஆம், வாழ்க்கையில் தான் எவ்வளவு திருப்பங்கள்- எதிர்பாராத திடீர் திருப்பங்கள்.
அம்மா கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். பொறுப்பற்றிருந்த அம்மா என்னென்னவெல்லாம் எண்ணிக் கொண்டு கூட்டிக் கழித்து கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறாளோ!
யுத்தத்தின் பயங்கரத்தை அம்பாலாவில் நன்றாக உணர முடிந்தது. டெலிபோனிலும் நேரடியாகவும் பலவிதப் பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன. அப்பா எங்கே இருக்கிறாரோ எந்த நிலையில் இருக்கிறாரோ. மனதை அரித்துக் கொண்டே இருந்தது அப்பாவின் நினைவு.
நாட்டு மக்களிடையே நம்ப முடியாத ஒற்றுமை- தியாக உணர்வு - பகிர்ந்து கொள்ளும் பாங்கு எல்லாமே மகத்தானதாக இருந்தன. வீரர்களுக்கு எங்கே சென்றாலும் உபசரிப்பு. நாட்கள் பயங்கரமாக நொண்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தன. யுகம் யுகமாக யுத்தம் நடந்தது போல நடப்பது போல இருந்தது.. வீரர்கள் பலத்த காயங்களுடனும் உயிரில்லாமலும் கொண்டு வரப்பட்டார்கள்.
"நீ டாக்டருக்கு படித்து இவர்களுக்கு உதவவேண்டும் பிந்து!" அப்பாவின் ஆசை என் காதில் ரீங்காரமிட்டது.
நானும் அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு தம் உற்றார் உறவினரை நினைத்து தவிக்கும் எண்ணற்ற ஜவான்களுக்கு இயன்ற உதவியை செய்தோம். ஒரு கையிழந்த வீரனுக்காக அவன் மனைவிக்கு காதல் சொட்டும் கடிதத்தை அதை ஒரு கடமையாக இயந்திரம் போல் எழுதிக்கொடுத்தேன். அம்மாவை போல ஒருத்தி இதற்காக எங்கே காத்துக் கொண்டிருந்தாளோ!
மக்கள் மனமுவந்து அனுப்பிய பரிசுப் பொருட்களை விநியோகித்தோம். ஆனால் கணவனையும் சகோதரர்களையும் பிள்ளைகளையும் இழந்து கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடிந்தது?அவர்களுடைய இழப்பு வாழ்வின் பெரிய சூன்யம் அல்லவா!
தங்கள் உயிர் இந்த உடலில் சில நாட்களோ மணிகளோதான் இருக்கும் என்று அறிந்து மனைவி மக்களையும் பெற்றோரையும் நினைத்துக் கண்ணீர் விட்ட வீரர்களின் கண்களை துடைக்க கரங்களுக்கு வலிமை போதவில்லை. பேதங்களை மறந்து மக்கள் நெருங்கி நெருங்கி ஒரே குடும்பமாக ஒட்டி நின்றது பெரிய தெம்பல்லவா!
அந்த ஞாயிறும் வழக்கம் போலத்தான் விடிந்தது. இந்து அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று நச்சரித்தாள். அவளை விளையாட அனுப்பி விட்டோம்.
டெலிபோன் மணி நெஞ்சில் ஒரு பீதியை உண்டாக்கியது. ரிசீவரை எடுத்தேன். தலையில் இடி இறங்கியது.
அப்பா அம்பாலாவுக்கு வந்துவிட்டார். சரியாகச் சொன்னால் கொண்டு வரப் பட்டிருந்தார். ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் செய்தி மார்பில் குண்டு போல் இறங்கி வெடித்தது. அம்மாவும் நானும் ஆஸ்பத்திரிக்கு பறந்தோம் அம்மா பூஜை அறைக்குள்ளே போய் வந்தாள்.
ஆஸ்பத்திரியை அடைந்தோம். அப்பாவின் அருகே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. தூரத்தே நின்று உடல் முழுவதும் கட்டுக்களுடன் குளுக்கோஸ், ரத்தம் ,ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட நிலையில் என் அருமைத் தந்தையைக் கண்ட அம்மா மயங்கி சாய்ந்து விட்டாள். ஒரே அமைதி. நர்ஸ் ஓடி வந்து அப்பா கூப்பிடுவதாக கூறினாள். அம்மாவிடம் அசைவே இல்லை. அவளை நர்ஸிடம் ஒப்படைத்து விட்டு கால்கள் பின்ன அப்பாவின் அறையை அடைந்தேன்.
கடவுளே ! இது என்ன காட்சி! ஓடி ஆடிக் கொண்டிருந்த ஒப்பற்ற வீரரான என் அப்பாவை இப்படி ஒடுக்கி விட்டாயே!
அப்பாவின் சிறிய கண்கள் இத்தனை வேதனையிலும் மின்னின. மகத்தான சாதனை புரிந்திருந்தார் என் அப்பா. அவரது பட்டாலியன் எதிரிகளால் சூழப்பட்டதாம். தன்னைத் தலைவனாகக் கொண்ட தன் பட்டாலியனைக் காப்பாற்றி எதிரிகளை சின்னாபின்னமாக்கிவிட்டு அவர்கள் கொடுத்த அத்தனை பரிசுகளையும் தன் பட்டாலியன் சார்பில் தன் மார்பில் ஏற்று நிமிர்ந்த மார்புடன் கிடந்தார். என் கண்களிலிருந்து ரத்தம் வடிந்தது.
"பிந்து, அருகில் வா !"என்று மெதுவாக அழைத்தார்.
"கங்கிராஜுலேஷன்ஸ் டாடி! எத்தனை பெரிய காரியம் செய்திருக்கிறீர்கள். உங்கள் மகளாக நான் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்", என்று அப்பாவின் மிக அருகில் அமர்ந்தேன். அப்பாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
"அழாதே பிந்து "- கண்ணீரைத் துடைத்து விட இயலாதபடி அப்பாவின் கைகளில் ரத்தமும் குளுக்கோசும் ஏற்றப்பட்டு இருந்தன.
"அம்மா எப்படி இருக்கிறாள்? "
"உங்களுக்கு தெரிந்தது தானே டாடி அம்மா உங்களைப் பார்த்து விட்டு மயக்கமாகிவிட்டாள்",என்று விசும்பினேன்
"எதிர்பார்த்தேன், அவளால் தாங்க முடியாது என்று. அதனால்தான் உன்னைக் கூப்பிட்டேன்.
சில முக்கியமான விஷயங்களை சொல்லிவிட வேண்டும்" கோடை இடியாக முழங்கும் அப்பாவின் குரலில் தெம்பே இல்லை.
"அப்பா ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு பேசலாம்", என்று அவருடைய நெற்றியை வருடிக் கொடுக்கிறேன்.
"பிந்து , நேரம் குறைவு . சொல்வதை சொல்லிவிடுகிறேன். கவனமாக கேள் . அம்மா சொன்னதைக் போல நான் நாளையை பற்றி சிந்தியாமலே இருந்துவிட்டேன்.
உன் அம்மாவையும் என் கைகளுக்குள்ளேயே பாதுகாப்பாக பொறுப்பே தெரியாமல் வைத்திருந்து விட்டேன். நான் இறந்து விட்டால் அம்மா கோழையாகிவிடக்கூடாது.
கஷ்டப்படாமலிருக்கும் வகையில் சர்க்காரிலிருந்து அம்மாவுக்கு பணம் கிடைக்கும்.
அம்மாவுக்கு வேலையும் கொடுப்பார்கள் . அம்மா வேலையை ஏற்றே ஆகவேண்டும்",
அப்பாவுக்கு மூச்சு இரைக்கிறது.
நர்ஸ் ஆக்ஸிஜன் கொடுக்கிறாள். சிறிது நேரத்தில் அதை எடுத்து விட்டு மறுபடி தொடர்கிறார்.
"எந்த உறவினரிடமும் நீங்கள் போய் இருக்கக்கூடாது. என் குடும்பம் யாருக்குமே பாரமாக இருக்க நான் சம்மதிக்க மாட்டேன்.
அம்மா சம்பாதிக்கட்டும் உழைக்கட்டும் உங்களை உயர்த்தட்டும் . அம்மாவுக்கு தைரியம் சொல்லு"
"அப்பா இப்படி எல்லாம் பேசாதீர்கள். எவ்வளவு சிறந்த டாக்டர்கள் உங்களுக்கு வைத்தியம் செய்கிறார்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகாது."
"கமான் பிந்து , பீ மை டாட்டர்! இன்னும் சில நிமிடங்களோ மணிகளோ நாட்டுக்கு என் கடமையை செய்துவிட்டேன். நீயும் இந்துவும் மகத்தான நிலைக்கு வரவேண்டும்.
பெரிய புகழ் பெற்ற டாக்டராகி ஆர்மியில் சேவை செய்ய வேண்டும். இந்துவை பெரிய ஆபீசராக்கு. இதையெல்லாம் உன் அம்மா செய்து முடிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு பூரணமாக இருக்கிறது. உங்களுக்கு நான் ஆஸ்தி வைக்கவில்லை. அந்தஸ்து வைத்திருக்கிறேன். அவளுக்கு நீதான் மகன்.
எல்லாம் நடக்கும் அப்பா . கொஞ்சம் தண்ணீர் சாப்பிடுங்கள்".
சிறிது நேரம் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். எவ்வளவெல்லாம் சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ பாவம்!
"அப்பா , அம்மா கோழையல்ல.! அவள் உங்கள் மனைவி. உங்கள் ஆசைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவாள். நிச்சயம் நான் துணையிருப்பேன் என்று அவரைத் தேற்றினேன்.
"பிந்து, வீட்டில் நான் இல்லாததே தெரியக்கூடாது. நான் எப்போதும் உங்களிடையே தான் இருப்பேன். நீயாவது இத்தனை நாள் என் அன்பை அனுபவித்தாள். பாவம் இந்து " அப்பாவின் கண்களில் கண்ணீர்.
"இந்துவைப் பார்த்துக் கொள் . அவளிடம் அன்பைப் பொழி. யாரிடமும் கையேந்தி உதவிக்கு நிற்காமல் ஒரு வீரனின் குடும்பமாக தலைநிமிர்ந்து வாழவேண்டும். வாக்கு கொடு பிந்து."
என்னுள் ஒரு ஆவேசம்."அப்பா ,என் உடலிலும் வீர ரத்தம் தான் ஓடுகிறது. மார்பில் காயங்களுடன் புறமுதுகு காட்டியே அறியாத உங்களின் மகள் நான். நீங்கள் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவோம். அம்மாவே இதையெல்லாம் செய்து முடிப்பாள். இது சத்தியம். டேக் இட் ஈஸி டாடி", முதல் முறையாக அவர் வார்த்தைகளை அவருக்கே சொன்னேன்.
அப்பா என்னை குனியச் சொல்லி வாஞ்சையுடன் முத்தமிட்டார். 'டேக் கேர்' அத்துடன் அந்த வீரரின் வாழ்க்கை முடிந்தது.
பிறகு நடந்ததை எழுத்தால் எழுத முடியாது.
அழுது புலம்பி தேற்றப்பட்டு தேறி ஒரு நிலைக்கு வந்தோம். எதிர்காலத்தை எப்படி அமைப்பது என்று யோசிக்கும் அளவுக்கு அம்மா நிமிர்ந்து நின்றாள்.
அம்மாவுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது! இறக்கையினூடே மூடி வைத்த கோழி இல்லையே! அப்பாவே அம்மாவினுள் புகுந்து விட்டாரோ!. அம்மாவுக்கு காஸ் ஏஜென்சி வழங்கப்பட்டது. அப்பா வீட்டில் இருந்த போது இருந்தது போலவே வைத்த பொருள் வைத்த இடத்தில் இருந்தது.
அப்பா இல்லையென்று பார்ப்பவர்கள் எண்ண மாட்டார்கள். அப்பா டூர் போயிருக்கிறார். இதோ வந்துவிடுவார் என்ற உணர்வுதான் இருந்தது எங்களிடையே.
அப்பாவுக்கான வீரச் சக்கர விருதை அம்மா பெற்றுக் கொண்டாள்.
அம்மாவின் கண்களில் லேசான கண்ணீரோடு அப்பாவின் கண்களில் கண்ட அதே வீரம் மின்னியது. முன்பு அம்மாவாக இருந்தவள் இப்போது அம்மாவும் அப்பாவுமாக மாறி இரட்டிப்பு பலம் பெற்று திடமாக நின்றாள்.
நம்பவே முடியவில்லை.
போர் முடிந்து இந்தியா வெற்றி வாகை சூடிய புதிதில் போர் வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எங்கு சென்றாலும் வரவேற்பு . மக்கள் அன்பையும் பாசத்தையும் நன்றியையும் மடை திறந்த வெள்ளமாக கொட்டினார்கள்.
உறவும் நட்பும் இங்கு வந்த வண்ணம் இருந்தபடியால் எங்களால் துக்கத்தை சிறிதளவு மறக்க முடிந்தது. எத்தனை நாட்களுக்கு?
மக்களிடையே யுத்தத்தின் வடு மறைய ஆரம்பித்தது.அது அவர்கள் குற்றம் இல்லை.
யுத்தத்தின் விளைவாக விலைவாசிகள் அதிகரிக்க அவரவர் குடும்பத் தொல்லையே சரியாக இருந்தது.
எங்கள் வீட்டுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை தேய்ந்து நம் சுக துக்கங்களை நாமே உணர வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதாரமாக இருக்க கற்றுக் கொண்டோம்.
ஒரு கவிஞன் எழுதியதை படித்தது பளிச்சென்று நினைவில் வந்தது. "ஏ வீரனே!உனக்கு மார்பில் பட்டு காயத்தை விட என் கன்னத்தில் பிளேடினால் விழுந்த கீறல் பெரிதாக படுகிறது . நான் மனிதன்."
சிரித்துக் கொண்டேன்.
"என்ன பிந்து, சிரிக்கிறாய்! சில வருடங்களில் டாக்டர் பிந்து நாயர் ஆகி விடுவாய். அப்பாவின் ஆசையை ஆண்டவனின் கட்டளையாக கொண்டு நிறைவேற்ற கடவுள் அருள் புரிந்து விட்டார். மற்ற கடமைகளையும் நிறைவேற்றி விடுவோம்"
"பக்கத்து வீட்டு கிழவருக்கு பிளட் பிரஷர் பார்க்க வேண்டுமாம்.
போய்விட்டு வா. சீக்கிரம் வந்து விடு".
அப்பாவின் விருப்பம் போலவே ஒருவருக்கும் பாரமாக இல்லாமல் அம்மா ஒரு வீரனின் மனைவியாக புறமுதுகு காட்டாமல் வாழ்க்கை போராட்டத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறாள்.
வீரனின் மனைவி வீராங்கனை தான். என்று பெருமையுடன் அம்மாவைப் பார்க்கிறேன்.
இந்து ஏதோ ஒரு காமிக் புத்தகத்தை படித்துக் கொண்டே களுக் என்று சிரிக்கிறாள். அப்பாவின் கார்பன் காப்பி
'டாக்டர் பிந்து, கிளம்பு, என்று என்னை கேலி செய்து கொண்டே ப்ளட்பிரஷர் யூனிட்டை கொடுக்கிறாள் அம்மா.
ரேடியோவில் மேலே அப்பாவின் இக்குடும்பத் தலைவரின் இந்நாட்டின் ஒப்பற்ற வீரரின் பரமசக்கர விருது கம்பீரமாக நிற்கிறது.
-பால விஸ்வநாதன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...