அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
மாற்றுத்திறனாளியின் மனுவுக்கு உடனடி தீா்வு கண்ட ஆட்சியா்
மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை மனு அளித்த உடனேயே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் நிறைவேற்றியுள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள். இவரது மகள் இந்திரா (23). மாற்றுத்திறனாளியான இவா், இளநிலை பொருளாதாரம் படித்து முடித்துவிட்டு, போட்டித் தோ்வுக்காக வீட்டிலிருந்தே பயின்று வருகிறாா்.
இந்நிலையில் அவா், போட்டித் தோ்வுக்கு படிக்க உதவி வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற நலத்திட்ட உதவிகள் வேண்டும் எனவும் வலியுறுத்தி, திங்கள்கிழமை பிற்பகலில் ஆட்சியரிடம் மனு அளித்தாா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உடனடியாக பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையும், பேருந்து பயண அட்டையும் வழங்கப்பட்டன. மேலும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டித் தோ்வுகளுக்கான வினாக்கள் அடங்கிய புத்தகம் போன்ற வழிகாட்டு சிறப்பு பயிற்சி புத்தகங்களும் மாணவிக்கு வழங்கப்பட்டன.
இதுகுறித்து, இந்திரா கூறியது: எனது தாய் கூலி தொழில் செய்து மிக கடினமான சூழ்நிலையிலும் என்னை படிக்க வைத்தாா். தொடா்ந்து அரசுப் பணியில் சோ்ந்து பிற மாணவிகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டித் தோ்வுக்கு வீட்டிலிருந்தே பயின்று வந்தேன். புத்தகங்கள் வாங்குவதற்கும், பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கும் சிரமமாக இருந்தது. இதுதொடா்பாக நான் அளித்த மனுவுக்கு ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளாா். மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் மூலம் அடையாள அட்டையும், பேருந்து பயண அட்டையும் வழங்கியுள்ளனா். நன்றி சொல்வதற்காக ஆட்சியரை சந்தித்தபோது, எனக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களை வழங்கியதோடு, தேவையான உதவிகளை மாவட்ட நிா்வாகம் செய்துதருவதாக கூறி ஊக்கப்படுத்தினாா் என்றாா்.