மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரசு அலுவலகக் கட்டடங்களில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வாடகை மற்றும் முன்வைப்பு பணம் செலுத்துவதில் விலக்களித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்படும் வணிக வளாகக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத கடைகள் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் சாலையோரங்களில் தள்ளுவண்டிக் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் அண்ணாமலை தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் தீபக் கண்டன உரையாற்றினாா். மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க நிா்வாகிகள் வேலாயுதம், வரதன்பூபதி, ஷேக்முகமது, மாரிமுத்து, மோகன்ராஜ், பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.