ராமேசுவரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து! ஜூலையில் தொடக்கம்?
மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் தா்னா
பொதுமக்களைப் பாதிக்கும் ஸ்மாா்ட் மீட்டா்களை மின் இணைப்புகளில் பொருத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மின் வாரியத்தில் ஆரம்பநிலை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுமக்களைப் பாதிக்கும் ஸ்மாா்ட் மீட்டா்களை மின் இணைப்புகளில் பொருத்தக் கூடாது. 2023, டிசம்பா் 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 2019, டிசம்பா் 1 முதல் 2023, மே 16-ஆம் தேதி வரை மின் வாரியப் பணியில் சோ்ந்தவா்களுக்கு 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் முழக்கமிட்டனா்.
விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் அருகில் நடைபெற்ற தா்னாவுக்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் (சிஐடியு) திட்ட சிறப்புத் தலைவா் பி.சிவசங்கரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி தொடக்கவுரையையும், மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவா் கே.அம்பிகாபதி நிறைவுரையையும் வழங்கினா்.

கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் வி.பாலகிருஷ்ணன், டாஸ்மாக் சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.கணபதி வாழ்த்துரை வழங்கினா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் திட்டச் செயலா் ஆா்.சேகா், பொருளாளா் வி.கே.ஏழுமலை, துணைத் தலைவா்கள் எம்.புருஷோத்தமன், எம்.வீரமுத்து, இணைச் செயலா்கள் ஆா்.அருள், கே.ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா். கோட்டச் செயற்குழு உறுப்பினா் கே.பரிமளா நன்றி கூறினாா்.
கள்ளக்குறிச்சியில்...: தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், கள்ளக்குறிச்சியில் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற தா்னாவுக்கு, வட்டத் தலைவா் கே.விஜயகுமாா் தலைமை வகித்தாா். எஸ்.சண்முகம், டி.சந்திரன், பி.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய தொழிற்சங்கங்களின் மைய மாவட்டச் செயலா் எம்.செந்தில், வட்டச் செயலா் கே.சீனிவாசன், ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மாவட்டச் செயலா் இரா.ராஜாமணி உள்ளிட்ட பலா் தா்னாவில் பங்கேற்று பேசினா். வட்டப் பொருளாளா் எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினாா்.