Doctor Vikatan: வைட்டமின் மாத்திரைகளை இப்படி எடுத்தால்தான் பலன் கிடைக்குமா..?
Doctor Vikatan: எந்தெந்த வைட்டமின்களை எப்படிச் சாப்பிட வேண்டும்... உதாரணத்துக்கு, இரும்புச்சத்துக்கான சப்ளிமென்ட் சாப்பிட்டால், கூடவே வைட்டமின் சியும் சேர்த்து எடுக்க வேண்டும் என்கிறார்களே... தனியே எடுத்தால் பலன் இருக்காதா, உணவுக்கும் இது பொருந்துமா, இதைத் தெளிவுபடுத்த முடியுமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

உங்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தச்சோகை இருந்தால், அதற்காக இரும்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும்போது, கூடவே, வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சேர்த்து எடுக்கும்போது இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவது சிறப்பாக இருக்கும்.
உதாரணத்துக்கு, நீங்கள் பேரீச்சம்பழம், வெல்லம் போன்றவற்றைச் சாப்பிடும்போது, கூடவே ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சைப்பழ ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கும்போது இரும்புச்சத்து நன்றாக உட்கிரகிக்கப்படும். கீரை சாப்பிடுகிறீர்கள் என்றால், அத்துடன் வைட்டமின் சி சத்துள்ள உணவைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். எலுமிச்சைப்பழ சாதம், கீரை மாதிரியான காம்போவில் எடுத்துக்கொள்ளலாம்.
வைட்டமின் டியும் கால்சியமும் சேர்த்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. இந்த இரண்டும் இரட்டைப் பிறவிகள் போல... வைட்டமின் டி சத்தானது முட்டை, செறிவூட்டப்பட்ட உணவுகளில் (fortified foods) அதிகம் கிடைக்கும். ஆனால், ஒவ்வொரு வைட்டமின் சப்ளிமென்ட்டையும் எதனுடன் சேர்த்து எடுக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆராய வேண்டாம்.
உங்களுக்கு ஏதேனும் சத்துக்குறைபாடு இருந்து, அதற்காக மருத்துவரையோ, ஊட்டச்சத்து ஆலோசகரையோ பார்த்தீர்கள் என்றால், அவரே உங்களுக்கு எந்த வைட்டமினை எப்படிச் சாப்பிட வேண்டும், அதனுடன் சேர்த்து எடுக்க வேண்டிய உணவுகள் என்ன என்று விளக்கிவிடுவார்.

மற்றபடி பேலன்ஸ்டு உணவுதான் எப்போதும் எல்லோருக்குமான பொதுவான அறிவுரை. அந்த வகையில் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் என தினமும் ஏதோ ஒரு கார்போஹைட்ரேட் உணவு எடுக்க வேண்டும். அடுத்தது புரோட்டீன். இதற்காக சிக்கன், முட்டை, பருப்பு, ராஜ்மா, கொண்டைக்கடலை, பனீர், பால், தயிர், மோர் போன்றவற்றை எடுக்கலாம். நார்ச்சத்து மற்றும் வைட்டமின் தேவைக்காக நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். நார்ச்சத்துடன், இரும்புச்சத்தும், தாதுச்சத்துகளும் சேர்த்துக் கிடைக்க கீரைகள், காய்கறிகள் எடுக்க வேண்டும். கொழுப்புச்சத்தும் உடலுக்கு அவசியம் என்பதால் சிறிதளவு எண்ணெய், நெய் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்படி எல்லாம் கலந்ததுதான் பேலன்ஸ்டு டயட். இதைத் தவிர்த்து தனித்தனியே வைட்டமின்கள், மினரல்கள்,எதனுடன் எது என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.