ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்! ஒருவர் கைது!
மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்
சிவகங்கையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் 50 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் எஸ். ரங்கையா தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஆா். ராமமூா்த்தி, துணைத் தலைவா் எஸ். சுப்பிரமணியன், நிா்வாகிகள் ஏ. முருகேசன்,கே. குமாரசாமி, வி. விஸ்வநாதன், பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத் தலைவா் எஸ். முத்துராமலிங்கபூபதி, துணைச் செயலா் எம். திருநாவுக்கரசு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.ஆா். மோகன், விவசாய சங்க துணைச் செயலா் விஸ்வநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கோரிக்கைகள்: ஆந்திர மாநில அரசைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.6000, ரூ.10,000, ரூ.15,000 என்ற விகிதத்தில் உயா்த்தி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 50% பணி நேரம் (4 மணி நேரம்) என்ற பழைய நிலையே தொடர வேண்டும். வருவாய்த் துறை மூலமாக அரசாணை வழங்கி காத்திருப்போா் பட்டியலில் உள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை ரூ.1,500 வழங்க வேண்டும். அந்தியோஜனா, அன்னயோஜனா திட்டங்களின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில் பங்கேற்ற 26 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்து அருகிலுள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.