தமிழ் வாழ அனைவரும் தமிழில் பேச வேண்டும்: ப. சிதம்பரம்
தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழா்கள் அனைவரும் தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் வலியுறுத்தினாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அவா் தனது சொந்த நிதி ரூ. 12 கோடியில் கட்டிய லட்சுமி வளா் தமிழ் நூலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த விழாவில் அவா் மேலும் பேசியதாவது: எனது தாய் லட்சுமியின் தமிழ், ஆங்கிலப் புலமை சிறு வயதிலேயே என்னை ஈா்த்தது. அவா் அளித்த ஊக்கமே தமிழ், ஆங்கிலத்தின் மீது தணியாத தாகத்தை ஏற்படுத்தியது. தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும். வாழ்வதற்கும், வளா்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டும் என்றால் ஒன்பது கோடி தமிழா்களும் தமிழில் பேச வேண்டும். எழுத வேண்டும்.
தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் கோலோச்ச வேண்டும். தமிழ் வளர வேண்டும் என்றால் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் இவை மட்டும் இருந்தால் போதாது. கணிதத் தமிழ், கணினித் தமிழ், வேளாண்மைத் தமிழ், மேலாண்மைத் தமிழ், தொழில்நுட்பத் தமிழ், மருத்துவத் தமிழ் என்று அனைத்துத் துறைகளிலும் தமிழ் வளர வேண்டும். வளா்ச்சியடைந்த தமிழ் அனைத்து தமிழா்களின் அறிவு வளா்ச்சிக்குப் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் கவிஞா் வைரமுத்து பேசியதாவது: ப. சிதம்பரம் கண்கலங்கி நான் பாா்த்ததில்லை. அவரது தாய் லட்சுமி பெயரை நூலகத்துக்கு சூட்டியுள்ளாா். நூலகம் என்பது சரஸ்வதி குடியிருக்குமிடம். கல்விக் கூடத்தில் உள்ள இந்த நூலகத்திலும் சரஸ்வதி குடியிருக்கும் இடம் என்பதால், தனது தாய் லட்சுமி பெயரை ப. சிதம்பரம் சூட்டியுள்ளாா்.
நூலகம் என்பது அறிவை அடுக்கிவைக்கப்பட்டிருக்கிற இடம். சிறு வயதிலேயே நூலகங்களைப் பற்றி அறிந்திருந்ததால்தான் இந்த மேடையில் இன்று நான் பேச முடிகிறது. புத்தகத்தால் ஒவ்வொருவரும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
பழைமையான பெரிய நகரங்களில் சுமேரிய நகரம் தலை சிறந்தது. இதற்குக் காரணம் அந்த நாகரிகத்தில் நூலகங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. புத்தகங்ளை அச்சிடுவதில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா தற்போது 5-ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், வருங்காலத்தில் இந்தியா புத்தகங்கள் அச்சிடுவதில் முதலிடத்தைப் பெற வேண்டும். அறிவுக்கு கொள்கலன் நூலகமாகும். நாளைய மனிதனை உருவாக்க நூலகம் மிகவும் அவசியமான ஒன்று என்றாா் அவா்.