மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல்!
உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் தாம்ராவலி கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பகவத் சிங் என்பவரின் திருமணத்தையடுத்து, இசைக்குழுவினருடன்கூடிய திருமண ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில், மாற்று சமூகத்தினர் வசிக்கும் தெருவுக்குள் பட்டியலின சமூகத்தினர் திருமண ஊர்வலம் நடத்தக் கூடாது என்று திருமண ஊர்வலத்தில் மாற்று சமூகத்தைச் (தாக்கூர் பிரிவு மக்கள்) சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 40 பேர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலின்போது இரும்புக் கம்பிகள், கூர்மையான ஆயுதங்கள், மரக் கட்டைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
திருமண ஊர்வலத்தை திருப்பி அனுப்பியதுடன், குதிரையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையான பகவத் சிங்கை கீழே தள்ளி, இழுத்தும் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் 6 பட்டியலினப் பெண்கள் காயமடைந்த நிலையில், தங்கள் தெருவுக்குள் பட்டியலினத்தவர் வரக்கூடாது என்று எச்சரித்து விரட்டியுள்ளனர்.
இதையும் படிக்க:விசுவாசியும் துரோகியும் சேர முடியுமா? இபிஎஸ்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருமண ஊர்வலத்தில் அதிக சப்தத்துடன் இசைக்குழுவினர் இசைத்ததால்தான் திருமண ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதாகக் கூறினர்.
இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் தேடப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர். மேலும், இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.பி.யும் பாஜகவின் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளருமான போலா சிங் கேள்வியெழுப்பியதற்கு முன்னர்வரையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து பாஜக எம்.பி. போலா சிங் ``இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சாதிய பாகுபாட்டை வெளிப்படுத்தியவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க வேண்டும் என்று கூறினார்.
கடந்த டிசம்பர் மாதத்திலும் இதே பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவரின் திருமண ஊர்வலத்திலும் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டு, திருமண ஊர்வலம் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.