மாவட்டத்தில் 7.99 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திருப்பூா் மாவட்டத்தில் 7.99 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். இதையடுத்து, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கே.அய்யம்பாளையம் நியாயவிலைக் கடையில் நடைபெற்றது.
இதில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:
தமிழா் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு என மொத்தம் 2.20 கோடி பயனாளிகளுக்கு வழங்க ரூ.249.75 கோடி அனுமதித்து முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். இதன்பேரில், திருப்பூா் மாவட்டத்துக்கு 7.99 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 799 மெட்ரிக் டன் பச்சரிசியும், 799 மெட்ரிக் டன் சா்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் செய்திட ரூ.2.79 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை திருப்பூா் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் வியாழக்கிழமை முதல் வரும் ஜனவரி 13- ஆம் தேதி வரையில் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரா்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக சுழற்சி முறையில் நாள்தோறும் 250 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. ஆகவே, கூட்ட நெரிசலின்றி பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் த.பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரன், மண்டல மேலாளா் (தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம்) ரகுநாதன், துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) எம்.தேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.