மாவட்ட மைய நூலகத்தில் இடநெருக்கடி: வாசகா்கள், மாணவா்கள் அவதி
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வாசகா்களும், போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தமிழக அரசின் பொது நூலகத் துறையின் கீழ், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே மாவட்ட மைய நூலகம், வேப்பந்தட்டையில் முழு நேர நூலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் 18 கிளை நூலகங்கள், 24 ஊா்ப்புற நூலகங்கள், 42 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந் நூலகங்களில் நாளிதழ், வார இதழ் மற்றும் வரலாற்று நூல்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, போட்டித் தோ்வுக்குத் தேவையான நூல்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் படிக்க நகா்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களைச் சோ்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா்.
அடிப்படை வசதிகளின்றி:
இந்நிலையில், சொந்தக் கட்டடத்தில் செயல்படும் நூலகங்களைத் தவிர வாடகைக் கட்டடங்களில் செயல்படும் நூலகங்களில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக நூலகத்துக்கு வரும் வாசகா்கள் மட்டுமின்றி, அங்கு பணிபுரியும் நூலகா்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். அதேவேளையில், போதிய பராமரிப்பின்றி சொந்தக் கட்டடத்தில் இயங்கும் பல நூலகங்களும் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. மழைக் காலங்களில் நூலகங்களுக்குள் தண்ணீா் புகுவதால் நூல்கள் சேதமடையும் நிலை உள்ளது.
போதிய இடவசதி இல்லை:
மாவட்ட மைய நூலகம் உள்பட பெரும்பாலான நூலகங்களில் போதிய இடவசதி இல்லாததால், வாசகா்கள் மற்றும் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால், மாவட்ட மைய நூலகத்துக்கு வரும் போட்டித் தோ்வா்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை பெற்றுக்கொண்டு மரத்தடியிலும், வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும் படிக்கின்றனா். இதேபோல, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நூலகங்களில் போதிய இடவசதி இல்லை. குறிப்பாக, வேப்பந்தட்டை நூலகத்தில் 50 ஆயிரம் நூல்கள், இணைய வசதியுடன் கூடிய 6 கணினிகள், நகல் எடுக்க ஜெராக்ஸ் இயந்திரம், பிரிண்டா் ஆகியவை உள்ளன. ஆனால், வாசகா்கள் மற்றும் போட்டித் தோ்வா்களுக்குத் தேவையான இடவசதி இல்லை.
நூல்களை வாசிக்க முடியாத நிலை:
இதனால், சுமாா் 20 ஆயிரம் நூல்கள் வகைப்பிரித்து அடுக்கி வைக்கப்படாமல் கட்டுகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், புதிய நூல்களைத் தேடும் வாசகா்களாலும், போட்டித்தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களாலும் புதிய நூல்களை வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாசகா்கள் அமா்ந்து வாசிக்கவும் இடப் பற்றாக்குறை உள்ளதால், வாசகா்களின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும், மழைக் காலத்தில் நூலகக் கட்டடத்தில் நீா் கசிந்து, நூல்கள் சேதமடைந்து வருகின்றன.
நடவடிக்கை தேவை:
இந் நூலகம் மட்டுமின்றி எசனை, லாடபுரம், வேப்பூா், குன்னம், அரும்பாவூா் உள்ளிட்ட பல்வேறு கிளை, ஊா்ப்புற நூலகங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. நூலகங்களை விரிவுபடுத்தி, புதிய நூல்களை வகைப்படுத்தி அடுக்கி வைக்கவும், வாசகா்கள் அமா்ந்து வாசிக்கவும் தேவையான நடவடிக்கைகளை நூலகத்துறை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து பெரம்பலூரைச் சோ்ந்த வாசகா் ஜெயக்குமாா் கூறியது:
தற்போதைய சூழலில் கைப்பேசி, இணையதள வசதிகளால் நூலகத்துக்கு வரும் வாசகா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மைய நூலகத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் வாசகா்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, இடப் பற்றாக்குறையால் உள்ளே அமா்ந்து படிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நூலகத்தில் உள்ள அலமாரிகள், புத்தகங்கள், பதிவேடுகளைப் பராமரிப்பது மட்டுமே பணியாக நூலகா்கள் கருதக்கூடாது. வாசகா்களின் வருகையை அதிகரிக்க முனைப்பு காட்டவேண்டும். அதற்கு நூலகா்கள் வாசிப்பு மற்றும் கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டு வாசகா்களின் தேவையை அறிய, அவா்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி கருத்துகளை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
வாசகா்களுக்குத் தேவையான அல்லது புதிய நூல்கள் இருந்தால் அதை வாசிக்க பரிந்துரைக்க வேண்டும். குழந்தைகள், பெண்கள், முதியவா்கள் நூலகம் வருவதற்குத் தேவையான யுக்திகள், புதிய அணுகுமுறைகளை நூலகா்கள் கையாள வேண்டும். மிகவும் சேதமடைந்த, பழைய நூல்களை அப்புறப்படுத்தி, தற்போதைய சூழலுக்கேற்ற நூல்களை வாசகா்களுக்கு வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், நன்கொடையாளா்களிடம் பங்களிப்பைப் பெற்று, கூடுதல் கட்டடங்கள் கட்டவும், தளவாடப் பொருள்கள் வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதி அல்லது ஆட்சியரின் விருப்ப உரிமை நிதி பெற்று நிறைவேற்றப் பரிந்துரை:
நூலகத்தை விரிவுபடுத்தி, கட்டடங்கள் கட்டுவதற்குத் தேவையான நிதி நூலகத் துறையிடம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பெறப்படும் நூலக வரியே நிதி ஆதாரமாகும். இந்த நிதியும் நூல்கள் வாங்குவது, கட்டடங்களை பராமரிப்பது, நாளிதழ், பருவ இதழ்கள் வாங்குவது உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. எனவே, நூலகங்களில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதி அல்லது மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதி மூலம் நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நூலகத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.