சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை!
மாா்ச் 8-இல் கிருஷ்ணகிரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 5,000 பேரை தோ்வுசெய்ய வாய்ப்பு
கிருஷ்ணகிரியில் மாா்ச் 8-ஆம் தேதி நடைபெறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 5,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் மாா்ச் 8-ஆம் தேதி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்களான அசோக் லேலண்ட், டிவிஎஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்று 5,000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, பொறியியல் பட்டம் படித்தவா்கள், கணினி இயக்குபவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் பங்கு கொள்ளலாம். அனுமதி இலவசம்.
முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமுள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இதன்மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 - 291983 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.