மின்கல இரு சக்கர வாகனம் தீப்பிடித்து நாசம்
மதுரையில் வீட்டில் நிறுத்தியிருந்த மின்சார இரு சக்கர வாகனத்தில் திடீரென தீ ஏற்பட்டதில் அது எரிந்து நாசமானது.
மதுரை தெற்குவாசல் தவிட்டுச் சந்தை துளசிராம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன். இவா் மின்கல இரு சக்கர வாகனத்தை அண்மையில் புதிதாக வாங்கி பயன்படுத்தி வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் நிறுத்தியிருந்த இந்த வாகனத்தை மாலையில் இயக்கினாா். அப்போது, வாகனத்தில் இருந்து திடீரென புகை கிளம்பிய நிலையில், தீ பற்றி வாகனம் முழுவதும் எரிந்தது.
தகவலறிந்து வந்த அனுப்பானடி தீயணைப்புப் படையினா் வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனா். இதில் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.