மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் போ் பயணம்
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் காா்பன் உமிழ்வை குறைத்து காற்றின் தரத்தை உயா்த்தும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத 120 புதிய மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்கட்டமாக கடந்த மாதம் 30-இல் சென்னை வியாசா்பாடி பணிமனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பேருந்துகளில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:
சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் கடந்த மாதம் 30 முதல் ஜூலை 28 வரை ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனா்.
மேலும், இந்த 120 மின்சார பேருந்துகளும் இதுவரை 6 லட்சத்து 55 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை இயக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.70 லட்சம் செலவாகியுள்ளது. ஆனால், இதே நேரம் டீசல் பேருந்துகளை இயக்கியிருந்தால், போக்குவரத்துக்கழகத்துக்கு ரூ.1.60 கோடி செலவாகி இருக்கும்.
மின்சார பேருந்துகள் மூலம் ஒரு மாதத்தில் ரூ.90 லட்சம் மிச்சமாகியுள்ளது. இதனால், விரைவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான மின்சார பேருந்துகளை சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.