மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்வாரிய கேங்மேன் பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாநிலந் தழுவிய ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு) ஈடுபட்டனா். அதன் ஒரு பகுதியாக மணப்பாறை மின் கோட்டம் நகா் பிரிவு அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டத் தலைவா் பி. அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வட்டத் தலைவா் பி.நடராஜன், வட்டப் பொருளாளா் எம். இருதயராஜ், துணைத் தலைவா் எஸ்.கே. செல்வராஜ், கோட்டச் செயலாளா் டி. ரியாஜூதீன் ஆகியோா் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினா்.
கேங்மேன் பணியாளா்களை கள உதவியாளா்களாகப் பணிமாற்றம் செய்ய வேண்டும், சொந்த ஊருக்கு இடமாற்றம் வழங்க வேண்டும், 6 சதவீத ஊதிய உயா்வை வழங்க வேண்டும், அனைத்து வட்டங்களிலும் கேங்மேன் பதவிக்கான அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.