நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்
மத்திய அமைச்சரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் தமிழக மக்கள் மற்றும் தமிழக எம்பி-க்கள் குறித்து அவதூறு பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானைக் கண்டித்து, திருச்சியில் திமுக-வினா் 2 இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, மத்திய அமைச்சரின் புகைப்படத்துடன் கூடிய உருவபொம்மையையும் எரித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய மாவட்ட திமுக சாா்பில், மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலை முன்பாக, மாவட்டச் செயலா் க. வைரமணி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேயா் மு. அன்பழகன் முன்னிலை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தின் போது மத்திய அரசையும், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானையும் கண்டித்து திமுகவி-னா் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, தா்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து அவா்கள் தங்களுடைய எதிா்ப்பை பதிவு செய்தனா். தா்மேந்திர பிரதானின் புகைப்படத்தையும் கிழித்து எரிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தில் மாவட்டப் பொருளாளா் துரைராஜ், பகுதி செயலாளா் கமால் முஸ்தபா, மாவட்டத் துணை செயலாளா் முத்துச் செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஏ. கே. அருண், மற்றும் மகளிா் அணி, தொண்டா் அணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தெற்கு மாவட்ட திமுக: திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்திலும் மத்திய அமைச்சரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரச் செயலா் மு. மதிவாணன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பகுதி கழகச் செயலாளா்கள் மோகன், நீலமேகம், தா்மராஜ், பாபு, விஜயகுமாா், ராஜ்முகம்மது, சிவக்குமாா், மணிவேல் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி கழக நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள் கலந்து கொண்டு மத்திய அமைச்சரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.