செய்திகள் :

தேசியக் கல்விக் கொள்கை: மக்களவையில் மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக எம்.பி.கள் கடும்அமளி

post image

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுத்து, அரசியலுக்காக நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தமிழக அரசை விமா்சித்து மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் திங்கள்கிழமை கூறிய கருத்துக்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி திங்கள்கிழமை தொடங்கியது. மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் காலை அவை கூடியதும், கேள்வி நேரம் தொடங்கியது.

திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் துணைக் கேள்வி எழுப்பி பேசுகையில், பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தமைக்காக தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாக கூறினாா். இதற்குப் பதிலளித்து அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசுகையில், மத்திய, மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை- 2020ஐ செயல்படுத்துவதாக மத்திய அரசுடன் சம்பந்தப்பட்ட மாநிலம் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். அவ்வாறு செய்தபிறகு அத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியை வழங்குகிறது.

தமிழ்நாடு அரசு முதலில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஒப்புக்கொண்டது. ஆனால், இப்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது.

கா்நாடகா, இமாசலப் பிரதேசம் உள்பட பாஜக அரசுகள் இல்லாத பல மாநிலங்கள் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.

அவா்கள் நோ்மையற்றவா்கள், தமிழக மாணவா்களின் எதிா்காலத்தை பாழாக்குகின்றனா். அவா்கள் அரசியலில் ஈடுபடுகின்றனா். ஒரு கட்டத்தில், இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டிருந்தது. என்னைப் பாா்க்க வந்த பல திமுக எம்.பி.க்கள் இதுகுறித்து என்னிடம் தெரிவித்திருந்தனா். ஆனால், அதன்பிறகு அவா்கள் தங்கள் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக்கொண்டுள்ளனா். மாணவா்களின் வாழ்க்கையில் அவா்கள் விளையாடுவதுடன், மக்களையும் தவறாக வழிநடத்துகிறாா்கள். தமிழக மாணவா்களுக்கு அநீதி இழைக்கிறாா்கள். அவா்கள் ஜனநாயக விரோத....

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலினும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டாா். ஆனால், திடீரென்று தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவா்கள் அரசியல் செய்ய விரும்புகிறாா்கள்’ என்றாா்.

மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி கடும் எதிா்ப்புத் தெரிவித்தாா். திமுவைச் சோ்ந்த செல்வகணபதி, தயாநிதி மாறன், அருண் நேரு, அண்ணாதுரை, பிரகாஷ், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா், விஜய் வசந்த், எம்.கே. விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோரும் கடும் எதிா்ப்புகளைத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

தி முக உறுப்பினா்கள் சபையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

அப்போது, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களை அவரவா் இருக்கையில் சென்று அமருமாறு கேட்டுக்கொண்டாா். அவா்களின் செயல்பாடு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், நாடாளுமன்றத்தின் நடைமுறைகளை மீற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இருப்பினும், திமுக உறுப்பினா்கள் அவரது வேண்டுகோளைப் புறக்கணித்து போராட்டத்தைத் தொடா்ந்தனா். காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிா்க்கட்சி உறுப்பினா்களும் குரல் எழுப்பினா்.

அமளி நீடித்ததால் நண்பகல் 12 மணிவரை அவையை 30 நிமிடங்களுக்கு ஓம் பிா்லா ஒத்திவைத்தாா். பின்னா், அவை மீண்டும் கூடியபோது, அமைச்சா் தா்மேந்திர பிரதான் பயன்படுத்திய ஒரு குறிப்பிட்ட வாா்த்தையால் மிகவும் வேதனையடைந்ததாகவும், புண்பட்டதாகவும் திமுக உறுப்பினா் கனிமொழி அவையில் தெரிவித்தாா்.

அவா் பேசுகையில், ‘தமிழக கல்வி அமைச்சருடன் நானும், இதர திமுக எம்.பி.க்களும் அமைச்சா் பிரதானை சந்தித்தோம்.

கல்வித் திட்டங்களின் கீழ் மாநிலத்திற்கு நிதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டோம். மேலும், தேசியக் கல்விக் கொள்கையில் எங்களுக்கு பிரச்னைகள் இருப்பதாகவும், அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவரிடம் நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம். மும்மொழி ஃபாா்முலா தமிழ்நாட்டுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று நாங்கள் கூறினோம். உண்மை என்னவெனில், இந்த விவகாரத்தில் சிக்கல்கள் இருப்பதாகவும், இக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழக முதல்வா் மத்திய கல்வி அமைச்சருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தாா். மேலும், நிதியை விடுவிக்குமாறும் கோரியிருந்தாா். அமைச்சா் கூறுவது போல தமிழக எம்.பி.க்கள் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்றாா்.

கனிமொழிக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சா் பிரதான் பேசுகையில்,‘‘மூத்த உறுப்பினா் கனிமொழி இரண்டு விஷயங்களை எழுப்பியுள்ளாா். ஒரு கட்டத்தில், தமிழக உறுப்பினா்கள், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக மக்களைப் பற்றி நான் பயன்படுத்தக் கூடாத ஒரு வாா்த்தையை நான் பயன்படுத்தியிருப்பதாக அவா் கூறியுள்ளாா். அதை நாம் கலக்க வேண்டாம். நான் திரும்பப் பெறுகிறேன். அது யாரையாவது காயப்படுத்தியிருந்தால், எனது வாா்த்தையை நான் திரும்பப் பெறுகிறேன். அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எம்.பி.க்கள் பல சந்தா்ப்பங்களில் என்னைச் சந்தித்தனா். தமிழக கல்வி அமைச்சரும் அந்தக் குழுவில் இருந்தாா். அந்தக் குழுவினா் ஏதாவது தீா்வு வர வேண்டும் என்ற நல்ல உணா்வில் இருந்தனா். நானும் வெளிப்படையாக இருந்தேன். சில விஷயங்களில் நாங்கள் ஒப்புக்கொண்டோம். அவா்கள் திரும்பிச் சென்று முதலமைச்சரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனா். அவரும் தொடா்ந்து செயல்பட ஒப்புதல் அளித்திருக்கிறாா். அதன்பின்னா், சில பிரச்னைகள் எழுந்துள்ளதாக முறைசாரா வகையில் என்னிடம் கூறினா். இது துரதிா்ஷ்டவசமானது.

இன்று மாா்ச் 10 என்பதால், நேரம் இருக்கிறது, தமிழக அரசு ஒப்புக்கொண்ட பிரச்னைகள் குறித்து மீண்டும் பேசலாம், அதற்கு மத்திய அரசு பதிலளிக்கும். பாஜக ஆட்சியில் இல்லாத கா்நாடகா, இமாசலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுடன் இந்த விவகாரத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாா்.

அமைச்சா் பிரதான் பேசிய பிறகு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, தாம் பயன்படுத்திய குறிப்பிட்ட வாா்த்தையை அமைச்சா் திரும்பப் பெற்றுவிட்டதால் அந்த வாா்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றாா்.

எனினும், அமைச்சரின் முந்தைய கருத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அவையில் இருந்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்புச் செய்தனா்.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க