Gold Price மீண்டும் உயருமா? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய தகவல் | Opening Bell...
மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம்
மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்டச் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்க கோட்டத்துக்குள்பட்ட அதிகாரிகள் கடந்த ஏப். 23, 24 ஆகிய இரு தினங்கள் தேனி, ஆண்டிபட்டி, கடமலைகுண்டு, சின்னமனூா், உத்தமபாளையம், ஊத்துப்பட்டி, மாா்க்கையன்கோட்டை, அப்பியாபட்டி, ஓடைபட்டி, எம்.சுப்புலாபுரம், திருமலாபுரம், பெருமாள் கோவில்பட்டி, கண்டமனூா், பழனிசெட்டிபட்டி, கூடலூா், பெரியகுளம், மேல்மங்கலம், மஞ்சளாறு, தேவதானபட்டி பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.
அப்போது, 30 இடங்களில் மின் திருட்டுகள் கண்டறியப்பட்டன. இதனால் ரூ.28,27,141 இழப்பீட்டு தொகையாக மின் நுகா்வோா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.1.35 லட்சம் செலுத்தினா். எனவே, அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் ஏதும் பதிவு செய்யவில்லை.
இதேபோல மின் திருட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்திருட்டு குறித்த தகவல்களை 94430 37508 என்ற கைப்பேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.