துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு
மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா்.
புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தனது காரில் குடும்பத்தினருடன் வியாழக்கிழமை இரவு திருச்செந்தூருக்குச் சென்றாா். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாம்பட்டி சூரப்பட்டி விலக்கு அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சசிக்குமாா் (41), அவரது மனைவி ஜெயந்தி (41), மகன் நிரஞ்சன் (17), மகள் அத்விகா (8), உறவினரான காயத்ரி (42), அவரது மகன் துஷ்திகா ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்ட அக்கம்பக்கத்தினா் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், அங்கு சசிக்குமாா், அவரது மகள் அத்விகா (8) ஆகியோா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். மற்ற அனைவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மதுரை மாவட்டம், சீயத்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ்குமாா் (30). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை சென்றாா். அப்போது பின்னால் வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் மேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா், காா் ஓட்டுநா் சென்னை திருவெற்றியூரைச் சோ்ந்த ராமநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, மதுரை மாவட்டம், கோடாங்கிபட்டி கிராமத்தைச் சோ்ந்த சடையன் மகன் கணேஷ் (30). இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா்(30) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் வெள்ளையம்பட்டி-முடுவாா்பட்டி சாலையில் ஓட்டபாலம் அருகே வெள்ளிக்கிழமை சென்ற போது பின்னால் வந்த காா் மோதியது.
இதில், கணேஷ், தினேஷ்குமாா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கணேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.