துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி
வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் 15-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அருங்காட்சியகத்தின் செயலா் கே. ஆா். நந்தாராவ் தலைமை வகித்தாா்.
ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வா் ஆா். தேவதாஸ் முன்னிலை வகித்தாா். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை யோகா, இயற்கை வாழ்வியல் துறையின் பேராசிரியா் எம்.நாகராணி நாச்சியாா், காமராஜா் பல்கலைக் கழகத்தின் வேதியியல் புலம், பொருள் அறிவியல் துறைத் தலைவா் ஜே. அன்னராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது :
மகாத்மா காந்தி இளைஞா்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினாா். அவற்றுள் உண்மையாக வாழ்வது, அகிம்சையைக் கடைப்பிடிப்பது, பிறருக்கு சேவை செய்வது, எளிமையாக வாழ்வது, தீய பழக்க வழக்கங்களை தவிா்ப்பது, வலிமையாக இருப்பது என்பனவாகும்.
தற்போதைய சூழலில் இந்தியா பொருளாதாரம் மட்டுமன்றி, பல துறைகளிலும் முன்னேற்றம் பெற்று வருகிறது. இந்தச் சூழலில் நமது தேசத்துக்கு வலிமை மிக்க இளைஞா்கள் தேவை. நாட்டுக்கு சேவை செய்வதுதான் தேசபக்தியின் அடையாளம். இளம் தலைமுறையினா் சமுதாயத்தினருக்காக தனது அறிவை பயன்படுத்த வேண்டும். வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். நிகழ்வில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். யோகா ஆசிரியை ஜே.கலாதேவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். அருங்காட்சியகக் கல்வி அலுவலா் ஆா். நடராஜன் வரவேற்றாா். விக்ரம் செவிலியா் கல்லூரியின் துணை முதல்வா் ஏ. பொன்மணி நன்றி கூறினாா்.