மிரட்டிய கோவிட்,'கம்பேக்'கை தடுத்த ஆபரேஷன்- 'அள்ளித்தந்த வானம்'கல்யாணி|இப்ப என்ன பண்றாங்க | பகுதி 5
ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் இவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
சென்னைப் பட்டணம் டூ சீரியல் ஹீரோயின்!
'அள்ளித் தந்த வானம்' படத்தில் பிரபுதேவாவுடன் 'சென்னைப் பட்டணம்' பாடல் காட்சியில் ஆட்டம் போட்ட அந்தக் குழந்தையை நினைவிருக்கிறதா? 'அட, நம்ம கல்யாணி'ங்க. பிறகு சீரியல்லாம் கூட நடிச்சாங்களே' ஆமா, இப்ப எங்க அவங்க' என்கிறீர்கள்தானே?
கேரளாவில் பிறந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் குறுகிய காலத்தில் ஒரு ரவுண்டு வந்த கல்யாணியின் நிஜப் பெயர் பூர்ணிதா. குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே மம்மூட்டி, பிரபுதேவா, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து விட்டவர். தமிழ் சீரியல்கள் சிலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு, தன்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் ஹீரோயினாகக் களமிறங்கினார்.

'பிரிவோம் சந்திப்போம்', 'தாயுமானவன்', 'ஆண்டாள் அழகர்' என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின இவர் நடித்த சீரியல்கள். இன்னொருபுறம் ஆங்கரிங் ஏரியாவிலும் கால் பதித்து சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். 'பீச் கேர்ள்ஸ்' இவர் தொகுத்து வழங்கி ரொம்பவே வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சி எனச் சொல்லலாம்.
ஆர்வம், ஷூட்டிங் நேர்த்தி இரண்டிலும் இவருக்கு அப்படியொரு நல்ல பெயர் என்கிறார்கள் இவருடன் அப்போது சின்னத்திரையில் பணிபுரிந்த சிலர்.
டிவி, சினிமா இரண்டையும் பேலன்ஸ் செய்தபடியே பயணித்துக் கொண்டிருந்தவர் எப்போது ஏன் பிரேக் எடுத்தார்?
அவரைத் தெரிந்ந வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.
லண்டனில் மிரட்டிய கோவிட்!
''நடிகைகள் பலருடைய பிரேக்குக்கான பொதுவான காரணம் கல்யாணம். அதேதான் இவங்க விஷயத்துலயும் நடந்தது. பெங்களூருவைச் சேர்ந்த ரோஹித் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்துச்சு. மருத்துவத் துறையில் வேலை பார்த்த ரோஹித்துக்கு அப்ப லண்டன்ல வேலை கிடைக்க, அந்தச் சமயத்துல கல்யாணியின் அம்மாவும் தவறியிருந்தாங்க. 'ஒரு சேஞ்ச்சா இருக்கட்டுமே'னு குடும்பமே லண்டன் கிளம்பிடுச்சு.
நடிப்புக்கு அன்னைக்கு விட்ட பிரேக் தான். இப்ப வரைக்கும் திரும்பி வரல' என்றார்கள் அவர்கள்.
அதேநேரம் லண்டன் சென்ற கல்யாணி அங்கேயே செட்டிலாகி விடவில்லை. கோவிட் தொற்று உலகையே மிரட்டிய சமயத்தில் குடும்பத்துடன் பத்திரமாகத் தாய்நாடு திரும்பி விட்டார்.

'கொரோனா சமயத்துல எனக்கு ஒவ்வொரு நாளுமே திக் திக்னுதான் போச்சு. ஏன்னா, டாக்டரான ரோஹித்துக்கு வேலையே ஐ.சி.யூ.வுலதான். இன்டென்சிவ் கேர் யூனிட் ஸ்பெஷலிஸ்ட் அவர். கொரோனா போராட்டத்துல முன் வரிசையில நின்னவர். டியூட்டிக்குப் போனா திரும்பி வர ரெண்டு வாரத்துக்கு மேல ஆகும். ஹாஸ்பிட்டல்ல தினமும் நிறைய இறப்புகளையெல்லாம் பார்த்துட்டு வருவார். நான் பயப்படுவேனோன்னு அதுபத்தி எங்கிட்ட பேசத் தயங்குவார். ‘அவர் மன அளவுல பாதிக்கப்படக்கூடாது. வெளியில பேசுனா கொஞ்சம் ஃப்ரீ ஆவாரே’ன்னு நானே கேப்பேன். கடைசியில ரெண்டு பேருக்குமே பயம் வந்துடும். அதேபோல மகளை ஆசையா கொஞ்சக்கூட ரெண்டு பேருக்கும் பயமா இருக்கும். எங்க ரெண்டு பேரை விட்டா எங்கக் குழந்தைக்கு இங்க வேற யாருமில்ல. அதனால கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு ஒவ்வொரு நாளையும் கடத்துனோம். ‘மூணு பேரையும் பத்திரமா இந்தியா கொண்டு வந்து சேர்த்துடு கடவுளே’ன்னு தினமும் பிரார்த்தனைதான். பிரார்த்தனைக்குப் பலன் கிடைச்சு ஒருவழியா ரெண்டாவது அலைக்கு முன்னாடியே இந்தியா வந்துட்டோம். நல்ல வேளையா சென்னை அப்போலோவுல அவருக்கு வேலையும் கிடைச்சது' என அந்தச் சமயத்தில் நம்மிடம் பேசியிருந்த கல்யாணி,
'பாப்பாவும் வளர்ந்துட்டா. சினிமா, சீரியல்னு எனக்கு வித்தியாசம் கிடையாது. நல்ல கேரக்டர்கள் அமைஞ்சா பண்ணலாம்னு இருக்கேன். இந்த விஷயத்துல ‘உனக்கு எது சரின்னு தெரியுதோ அதைச் செய்’னு சொல்லிட்டார் கணவர்.
அவர் ஆரம்பத்துல இருந்தே எனக்கு அவ்வளவு சுதந்திரம் தந்துட்டு வர்றார். அதனால பிடிச்ச கேரக்டர்கள் கிடைச்சா நிச்சயம் மறுபடியும் நடிப்பேன்' என தன்னுடைய கம்பேக் விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்.
வதந்திய நம்பாதீங்க, நம்பிக்கைதான் வாழ்க்கை!
'திரும்பவும் நடிக்க வந்து விடுவார்' என அவருடைய ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் திடீரென ஒருநாள் தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்னை குறித்த தகவலைப் பொதுவெளியில் பகிர பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
'முன்னாடி செய்திருந்த முதுகெலும்பு அறுவைச் சிகிச்சையின் தாக்கத்தாலோ என்னவோ கொஞ்ச காலமா முதுகுப் பக்கம் வலி அதிகமா இருந்தது. மருத்துவர்களைப் பார்த்தப்ப, பழைய ஆபரேஷன்ல வைக்கப்பட்ட சில ஸ்க்ரூக்களை அகற்றி திரும்பி ஒரு அறுவைச் சிகிச்சை செய்யணும்னு சொன்னாங்க. தவிர்க்க முடியாத பிரச்னை. அதேபோல இந்த முறை கம்ப்ளீட்டா சரியாகி நார்மலுக்கு வரக் கொஞ்சம் நாள் பிடிக்கலாம். ஆனா நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

கோவிட் தொற்றுச் சமயத்துல பாப்பாவை வச்சுகிட்டு பெரியவங்க யாருடைய ஆதரவுமில்லாம பிரிட்டன்ல இருந்த கடினமான சூழலையே கடந்துட்டேன். அதனால இங்க என் சொந்த ஊர்ல சமாளிக்கறது பெரிய சிரமமா இருக்காதுன்னு நினைக்கிறேன். இன்ன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்பறேன். சோஷியல் மீடியாவுல என்னைப் பத்தி வர்ற மத்த எந்தச் செய்திக்கும் காது கொடுக்காதீங்க. அதெல்லாம் வதந்தியா இருக்கும்' எனத் தன் பிரச்னை குறித்தும் நம்பிக்கையுடன் பேசினார்.
இப்போது எப்படியிருக்கிறாராம்?
'குணமாகிட்டே வர்றாங்க. அவருடைய கணவர் ரொம்பவே சப்போர்ட்டா இருக்கறதால் சீக்கிரமே நார்மல் லைஃப்க்கு வந்திடுவாங்கன்னு நினைக்கிறோம். நடிப்புங்கிறது குழந்தையா இருந்த காலம் தொட்டே அவங்களோட இருக்கறது. முடிஞ்சா தாரளமா பண்ணச் சொல்லி கணவருமே சொல்லிட்டார். அதனால கூடிய சீக்கிரமே அவரை மறுபடியும் ஸ்க்ரீன்ல பார்க்கலாம்னுதான் எதிர்பார்த்திட்டிருக்கோம்' என்கின்றனர் நம்மிடம் பேசிய அவருடைய நட்பு வட்டத்தினர்.