மீண்டும் படப்பிடிப்பு விபத்தில் சிக்கிய ஜோஜு ஜார்ஜ்!
நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கினார்.
ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யாவுடன் ரெட்ரோ நடிகர் கமல் ஹாசனுடன் தக் லைஃப் ஆகிய திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இயக்குநராக, ’பனி’ என்கிற படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.
இந்த நிலையில், நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் வரவு என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
மூணாரில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், தீபக் பரம்போல் உள்பட 6 பேர் ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது வாகனம் திடீரென பள்ளத்தில் கழிந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கிறது.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், ஜோஜுக்கு காயம் ஏற்பட்டதாகவும் இன்னும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டிச்சென்றது ஜோஜுதான் என்பதும் தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் தக் லைஃப் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் ஜோஜு ஜார்ஜுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பெருமையாக இருக்கிறது லால்: மம்மூட்டி