`இனி யாசகம் செய்யக் கூடாது; மீறிச் செய்தால்...' - கடும் உத்தரவை பிறப்பித்த இந்த...
மீனவர்கள் விவகாரத்தில் நிலையான தீர்வு: இலங்கை அதிபர்
மீனவர்கள் விவகாரத்தில் நிலையான தீர்வு காண விரும்புவதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள திசநாயக, புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இதையும் படிக்க : மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறைக்கு இலங்கை அதிபர் ஒப்புதல்! மோடி
அப்போது திசநாயக பேசியதாவது:
சமூகப் பாதுகாப்பும் நீடித்த வளர்ச்சியும்தான் நம்மை நம் நாட்டு மக்கள் அதிகாரத்துக்குத் தேர்ந்தெடுத்ததற்கான அடிப்படை காரணம். ஒரே கட்சியில் இருந்து அதிகளவிலான உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றம் இதுதான்.
இலங்கை அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இலங்கை மக்கள் வெளிப்படுத்திய செய்தி இலங்கையில் ஒரு புதிய கலாச்சாரம் உருவாக வழி வகுத்தது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்கள், சமயங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர்.
பொதுச் சேவைகளை எண்ம(டிஜிட்டல்) மயமாக்குவதில் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோன்று இலங்கையும் அதே பாதையில் செல்கிறது. அந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்கும் பாதிப்பாக மாறியுள்ள மீனவர் பிரச்னைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஆழ்கடலில் இருக்கும் மீன்களை பிடிக்கும் முறையை பின்பற்றுகிறார்கள். அது, மீன்பிடித் தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு, இது எனது முதல் வெளிநாட்டு பயணம். எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக தில்லிக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்காகவும், நான் உள்பட என்னுடன் வந்த குழுவினருக்கு வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வழி வகுத்தது” என்றார்.