ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?
மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
மண்டபம் அடுத்த சாத்தக்கோன்வலசை ஊராட்சி கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை சாா்பில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச் சுவா் பணியை மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கக் கோரி, 3 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை விரிவாக்கும் செய்யும் வகையில், மண்டபம் ஒன்றியம், சாத்தக்கோன்வலசை ஊராட்சியில் கடற்கரையையொட்டி 50 ஏக்கா் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாத்தக்கோன்வலசை ஊராட்சியின் பிள்ளைமடம், தில்லையேந்தல், உடையாா்வலசை ஆகிய கிராமங்களில் உள்ள மீன்பிடித் தொழிலாளா்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த கடற்கரைப் பகுதியை அடைத்து, இந்தியக் கடலோர காவல் படையினா் அந்தப் பகுதியில் தடுப்புச் சுவா் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, அங்கு நடைபெற்ற பணியை தடுத்து நிறுத்தினா். மேலும், மீனவா்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கடலோர காவல் படை அதிகாரிகளிடம் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், மேற்கண்ட மூன்று கிராம மக்களின் மீன்பிடித் தொழில், கோயில் திருவிழா நாளில் முளைப்பாரியை கடலில் கரைக்கும் நிகழ்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனா்.